கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.
அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் ரம்யா. (இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள எல்லாமே மாற்றப்பட்ட பெயர்களே) நல்ல உழைப்பாளி. எதையும் சட்டென கிரகித்துக் கொள்ளும் மூளைக்காரி. தென்மாவட்டமொன்றிலிருந்து வந்து சகோதரியுடனும், வேறு உறவுப் பெண்கள் இருவருடனும் வசித்து, பணிபுரிந்து வந்தாள். அவளது தந்தையும் அதே தெருவில் இரண்டு வீடு தள்ளி இருந்தார். தாய் ஊரில்.
ஒரு ஞாயிறு காலை எட்டு மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவளது தந்தை அழைத்தார்.
“ரம்யா உங்க வீட்டுப் பக்கம் ஏதாவது வந்தாளா சார்” என்று கேட்டார். ரம்யா என் மனைவியை விட சிறியவளானாலும், என் மனைவிக்கு நல்லதொரு தோழி. “இல்லையே...” என்ற நான் “என்னாச்சுங்கய்யா” எனக் கேட்டேன். “காலை ஆறு மணிக்கே எங்கோ கிளம்பிப் போய்விட்டதாகச் சொன்னார்..
நான் ‘வந்துடுவாங்கய்யா...’ என்று ஃபோனை வைத்துவிட்டு, உமாவிடம் (இது மாற்றப்பட்ட பெயரல்ல மக்களே!) ரம்யாவைப் பற்றிக் கேட்டேன்.
“கம்பெனிலயே யார் யார் கூடவோ பேசறதா பேச்சு அடிபடுது. அவங்கம்மா ஒவ்வொரு தடவை வர்றப்பவும் நீங்க இருக்கற தைரியத்துலதான் இருக்கேன்’ன்னுட்டுப் போறாங்க.. இந்த தடவை அவங்கம்மா வந்தா கூட்டீட்டுப் போகச் சொல்லிடணும்” என்று புலம்பினாள்.
இதென்ன புதுக் குழப்பம் என்று நான் நினைத்துவிட்டு, வேறு வேலைகளில் நான் மூழ்கிவிட, கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து என் மனைவியின் அலைபேசி பிஸியாகத் தொடங்கியது.
“ரம்யா காலைல போனவ, இன்னும் வரலியாம்.. ஒனக்குத் தெரியுமாக்கா..”
“ரம்யா அவகூட வேலை செய்யற ஒரு பையன்கூட கொஞ்ச நாளா அங்கங்க பேசிகிட்டிருந்த பார்த்திருக்காங்க”
“இவ கழுத்துல இருந்த செய்ன் பத்து நாளா இவகிட்ட இல்லை தெரியுமா? அத எங்கயாவது அடகு வெச்சு, காசு வாங்கிட்டு அவன்கூட போய்ட்டாளோ..?”
“இன்னைக்கு அவளோட அக்கா ஊர்லேர்ந்து வர்றா. அவ ஒருத்திக்குதான் இவ பயப்படுவா... அவளுக்கு பயந்துதான் எங்கயோ போய்ட்டா போல...”
இப்படியாக ஆளாளுக்கு அவர்கள் கேள்விப்பட்டதை வைத்து என் மனைவியிடம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
விசாரித்ததில் மேலே சொல்லப்பட்ட எல்லாமே உண்மைதானெனத் தெரியவந்தது. அந்த அடகு மேட்டரைத் தவிர. அடகு வைத்ததற்கு மட்டும் சரியான ஆதாரம் சிக்கவில்லை.
பனிரெண்டு மணிக்கு, விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.... அவளது அப்பா மிகுந்த பதட்டத்தோடு வந்தார்.
“சார்... ரம்யா ஒருபையன் கூட தெனமும் பேசிகிட்டிருந்தான்ங்றாங்க. கொஞ்சம் விசாரிங்களேன்...”
அலைபேசியிலேயே விசாரித்தேன். அவன் பெயர் குணா. அடுத்த அதிர்ச்சி - அவன் நான்கு நாட்களாக பணிக்கு வரவேயில்லை! ஞாயிறென்பதால் அவனது அலைபேசி எண் பற்றிய தகவலும் யாரிமிருந்தும் பெற இயலவில்லை.
இதென்னடா வம்பாக இருக்கிறதே என்று நினைத்தவாறே அவரை சமாதானப்படுத்தி அவரது அறையில் விட்டுவிட்டு (ரெண்டு மணிநேரத்துல வர்றேன். நீங்க பதட்டப்படாம இருங்க) என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
இதுபோன்ற பதட்டமான சமயங்களில் எல்லாம், சம்பந்தப்பட்ட சம்பவத்தை முழுதும் மறந்து அரை மணி நேரம் கேரம் போர்ட் விளையாடவோ, க்ரிக்கெட் பார்க்கவோ செய்துவிட்டு மீண்டும் தெளிவான மனதுடன் அதைச் சந்திப்பது வழக்கம். அதேபோல அன்றைக்கும் வீட்டுக்குச் சென்றேன். உமாவைக் கலவரப்படுத்தவேண்டாம் என்பதால் ஒன்றூம் சொல்லவில்லை.
அரைமணி நேரம் மனதை வேறு விஷயங்களில் செலுத்திவிட்டு, பிறகு குணாவின் விலாசம் கண்டுபிடித்து - அவன் வீட்டுக்குப் போனேன்.
அவன் பாட்டி இறந்து நான்கு தினங்களாகி இருந்தன. அதற்காகத்தான் லீவு போட்டிருக்கிறான் அவன்!
ரம்யாவைப் பற்றிய பேச்சை முதலிலேயே ஆரம்பிக்காமல், “இந்த வழியா வந்தேன்பா.. உங்க பாட்டி தவறீட்டாங்கன்னாங்க. அதான் விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்தேன்” என்று பேச்சுக் கொடுத்தேன்.
கிளம்புமுன் எதேச்சையாகக் கேட்பதுபோல “கம்பெனிலேர்ந்து யாராவது வந்தாங்களா?” என்று கேட்டேன்.
“இல்லை” என்றவன் ”சார்.. ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” என்றான். ”என்னப்பா” என்றேன்.
“என்கூட வேலை செய்யற ரம்யா, அவ செய்ன் அறுந்துபோச்சுன்னு பத்த வைக்க எங்கிட்ட குடுத்தா சார். என் பக்கத்து வீட்லயே ஆசாரி இருக்காருங்கறதால நானும் வாங்கி அவர்கிட்ட குடுத்தேன். அவ நேரம் பாருங்க.. அடுத்த நாள், அந்த ஆசாரி - ஊர்ல அவர் வீடு மழைல இடிஞ்சிடுச்சுன்னு சொல்லாம கொள்ளாம ஊருக்குப் போய்ட்டாரு. அவ டெய்லி என்கிட்ட வந்து ‘அக்கா வர்றதுக்குள்ள வேணும்’னு சண்டை போட்டுட்டே இருந்தா. அதுக்குள்ள எங்க பாட்டி இறந்துட்டாங்கன்னு லீவு போட்டுட்டேன். அந்த செய்னை வாங்கித் தர்றேன்.. குடுத்துடறீங்களா சார்” என்றான்.
“சரி.. வாங்கிட்டு வா” என்று சொல்லி, அவன் அந்த ஆசாரி வீட்டுக்குப் போக நான் காத்திருக்க ஆரம்பித்தேன்.
அப்போது ஒலித்தது என் அலைபேசி.
உமாதான்.
“ஏங்க... ஒண்ணுமில்ல. ரம்யா அந்தப் பையன்கிட்ட அவ நகையை பத்தவைக்க குடுத்திருக்கா. அக்கா வர்றதுக்குள்ள வாங்கணும்னு அந்தப் பையன் வீட்டுக்கு ஃப்ரெண்டுகூட போலாம்னு ஹாஸ்டல்ல இருக்கற அவளோட ஃப்ரெண்டு ரூமுக்கு போயிருக்கா, அவ ஃப்ரெண்டு நைட் ஷிப்ட் முடிச்சு வந்ததால, பத்து மணி வரைக்கும் தூங்கீட்டு போலாம்டின்னு சொல்லிருக்கா. இவளும் படுத்து நல்லா அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கிட்டா. இப்பதான் எழுந்திருக்காங்க. மணி ரெண்டாச்சுன்னு பயந்து வீட்டுக்கு வந்துட்டாங்களாம். வேற ஒண்ணுமில்லைங்க. அவங்கப்பா உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு.. ஆமா நீங்க எங்க இருக்கீங்க?”
“ஃப்ரெண்டு வீட்டுக்கு வந்தேன். இதோ வந்துடறேன்”
நான் ஃபோனை வைத்ததும் குணா சங்கிலியை கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்தான்.
“மறக்காம குடுத்துடுங்க சார். பாவம் ரம்யா” என்றான்.
சிரித்தபடி விடைபெற்றேன் நான்.
.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...
ஒன்..டூ..த்ரீ................
1: இணையத்தில் ‘கட்டுக் கதையாக’ உலவும் ஒரு செய்தி.... (False News?)
ஓபரா வின்ஃப்ரே (Opera Winfrey)வின் டாக் ஷோ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர். உலகப் புகழ் பெற்ற Tommy தயாரிப்புகளின் மூலகர்த்தா.
ஓபராவின் டாக் ஷோ ஒன்றில், டாமியைப் பேட்டி காண்கிறார் அவர்.
ஓபரா கேட்கிறார். “இனவாதத்தை தூண்டும் விதமாய், உங்களைக் குற்றஞ்சாட்டி நீங்கள் பேசியதாக சில அறிக்கைகள் வந்ததே அவை உண்மையா.. நீங்கள் அப்படிப் பேசினீர்களா?”
அவர் சொன்னதாய் வந்த அறிக்கையையும் படிக்கிறார். அது இதுதான்..
“'If I'd known African-Americans, Hispanics, Jewish and Asians would buy my clothes, I WOULD NOT have made them so nice. I wish these people would NOT buy my clothes, as they are made for upper class white people”
டாமி சொல்கிறார்: “ஆம். நான் அப்படிச் சொன்னேன்”
ஓபரா உடனே “ ஷோவை விட்டு வெளியே செல்லுங்கள்” என்று அவரை வெளியேற்றி விடுகிறாராம்!
எப்படியெல்லாம் கதை கட்டுகிறார்கள் பாருங்கள்!
** ** ** ** ** **
2:
ஜோஹன்னஸ்பெர்குக்கும், லண்டனுக்கும் இடையில் பறக்கும் ப்ரிடிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது இது...
50 வயதுள்ள ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. கறுப்பர் ஒருவருக்கு அருகில் அவருக்கு சீட். பெண்மணியால் பொறுக்க முடியவில்லை. விமானப் பணிப்பெண்ணை அழைக்கிறார்.
பணிப்பெண்: “சொல்லுங்கள்... என்ன விஷயம்?”
வெள்ளைக்காரப் பெண்மணி: “என்ன விஷயமென்று தெரியவில்லையா? என்னை எங்கே அமரவைத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். இப்படி ஒரு விலக்கப்பட்டவரோடு பயணிக்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உடனே எனக்கு வேறு சீட் ஒதுக்குங்கள்”
பணிப்பெண் அவரைப் பொறுமையாய் இருக்கச் சொல்லிவிட்டு விமான கேப்டனிடம் பேசிவிட்டு வருகிறேனெனச் செல்கிறாள்.
சிறிதுநேரத்திற்குப் பிறகு வந்து “மன்னியுங்கள் மேடம்.. எகானமி க்ளாஸில் எல்லா சீட்களும் நிரம்பி விட்டதால் பிஸினஸ் க்ளாஸிலாவது சீட் இருக்குமென பார்க்கப் போனேன். அங்கும் ஒரு சீட்டும் இல்லை.”
வேகமாக இடைமறிக்க வந்த அந்தப் பெண்மணியைக் கையமர்த்தி நிறுத்திய பணிப்பெண் தொடர்கிறாள்:
“ஆனாலும் இப்படி ஒரு பயணியோடு பயணிக்கும் கஷ்டத்தைக் கொடுக்க எங்கள் கேப்டனுக்கு விருப்பமில்லை.. எனவே” என்றவள் சொன்னது கருப்பரின் பக்கம் பார்த்து! “சார்.. தயவுசெய்து உங்கள் உடமை ஏதுமிருப்பின் எடுத்து வாருங்கள். உங்களுக்காக கேப்டன் முதல் வகுப்பில் சீட் ஒதுக்கி காத்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் எங்கள் விருந்தினர்”
சுற்றியமர்ந்தவர்களெல்லாம் ஒருநிமிடம் தொடர்ந்து கைதட்டினார்கள்!
**************************
3:
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர். தனியார் நிறுவனத்துல குறிப்பிடத்தக்க பதவில வேலை செய்யறாரு. (பாருங்களேன் முரணை... அந்தப் பதவியைக் குறிப்பிடாம-குறிப்பிடத்தக்க பதவி-ன்னு சொல்றேன்...!)
வேலை சார்பாக அரசு அலுவலகங்களுக்கு போறதும், வேலை சம்பந்தமா பலருக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதும் அவர் வேலைகள்ல அடக்கம். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, அதுக்கான அதிகாரியை தொடர்ந்து சந்திச்சிட்டு இருக்காரு நண்பர். வேலை முடியற நேரம். லஞ்சமா ஐந்திலக்கத்தைத் தொடும் ஒரு தொகையைப் பேசி முடிச்சிருக்காங்க.
பேசிவெச்சுட்ட ஒரு நாள்ல இவர் அங்க போறாரு. தேநீர் உபசரிப்பெல்லாம் முடிஞ்சு, ‘எங்க வெச்சு தர?’ன்னு கேட்டிருக்காரு இவர். ‘இங்கயே கொடுங்களேன்’னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி.
இந்த நேரத்துல அந்த நண்பரை நான் ஃபோன்ல கூப்டிருக்கேன். என் நண்பர் ஃபோனை எடுக்காம பாக்கெட்ல கையை விட்டு காசை எடுக்க முயற்சி பண்ணிகிட்டிருந்தார். திடீர்னு அந்த அதிகாரி எழுந்து ‘மொதல்ல வெளில போங்க... இப்படியெல்லாம் என்கிட்ட நடந்துக்கக் கூடாது’ன்னு ஒரு தினுசா கத்தி இவரை வெளில விரட்டிருக்காரு.
இவர் வெளில வந்து, என்னான்னு புரியாம வேறொரு மத்தியஸ்தர் மூலமா அந்த அதிகாரிகிட்ட பேச, தன்னோட நண்பர் ஒருத்தரை அனுப்பி, பணத்தை வாங்கிகிட்டு வேலையை முடிச்சுக் குடுத்துட்டாரு.
இது நடந்து ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு ஏன் அப்படி நடந்துகிட்டீங்கன்னு நண்பர் கேட்க, அவர் சொன்னது சுவாரஸ்யமான விஷயம்:
அவரோட நோக்கியா ஃபோன்ல எனக்கு அவர் ஸ்பெஷலா ஒரு ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்காரு. Chat Alert ங்கற அந்த டோன் ஒரு மாதிரி விட்டு விட்டு அடிக்கும். அன்னைக்கு நான் கூப்டப்ப, அடிச்ச ரிங் சத்தத்தைக் கேட்டு அந்த அதிகாரி, ஏதோ ரெகார்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருக்காரு. அதான் விஷயம்!
‘நல்ல நேரத்துல கூப்டீங்க பாஸூ’ம்பாரு இப்பவும் என்னைப் பார்த்தா!
** ** ** ** ** ** ** ** ** **
டிஸ்கி: மொத ரெண்டு மேட்டருமே இனவாதம்ங்கறதப் பேசுது. அது ரெண்டுக்கும் மூணாவதுக்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரி உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கற ஏதோ மூணு விஷயங்களை குறிச்சு வெச்சு, அப்பப்ப எழுதிட்டிருந்தேன். அது திடீர்னு நின்னுபோச்சு. (நீ எழுதறதே நின்னுபோச்சே.. இது மட்டுமான்னு கேட்கறீங்கதானே?) ஒன் டூ த்ரீன்னு தலைப்பு வெச்சுத் தொலைச்சாச்சு. அதுனால இந்த மூணாவது மேட்டர். அதுமில்லாம இந்த மூணாவது விஷயம் ரொம்ம்ம்ம்........ப நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நெனைச்சுட்டே இருந்தது. அப்பாடான்னு இருக்கு இப்பத்தான்!
.
Labels: Bribe , opera winfrey , tommy hilfiger , அனுபவம் , லஞ்சம்
பட்டறை அனுபவம் - பார்ட்-2
ஏற்கனவே ஏழேமுக்கால் லட்சத்துக்கு கொஞ்சம் கம்மியான என் வாசகப் பெருமக்களிடம் அளித்திருந்த வாக்குப்படி, இன்றைக்கு சிறுகதைப் பட்டறைக்கு முன்னும், பின்னும் இடையிலும் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு இது....
*******************
சிறுகதைப் பட்டறைக்கு சனிக்கிழமை இரவு திருப்பூரிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு (நாலுபேரெல்லாம் குழுவாடான்னு கேட்கப்படாது!) கிளம்புவது என்று முடிவான பின், இரயிலேறுமுன் சிறு ஆலோசனைக் கூட்டம் கூட்டுவது என்று முடிவானது. அதன்படி திருப்பூரின் மிக முக்கியமான ஹோட்டல் ஒன்றில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் வெயிலான், முரளிகுமார் பத்மநாபன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
கோவையிலிருந்து இரயிலில் வந்துகொண்டிருந்த அண்ணாச்சி வடகரைவேலன் கேட்டிருந்த முக்கியமான ஆவணம் ஒன்றை நாங்கள் கேட்காமலே வரவழைத்துத் தந்த செந்தில்நாதனின் தம்பிக்கு நன்றி!
*******************
சென்னையில் அதிகாலையில் வந்திருந்து எங்களை வரவேற்றார் கார்க்கி. அவர் வீட்டில் குளித்து உடைமாற்றி ஹோட்டல் நோக்கி பயணிக்கும்போது முன்சென்ற ஆட்டோ ஒன்றில் ‘பெண்IN திருமண வயது’ என்றெழுதியிருந்தது. INஐ மட்டும் ஆங்கிலத்தில் எழுதியதேன் என்று வியந்து பேசிக் கொண்டு வந்தபோது செந்தில்நாதன் அவர் படித்த ஓர் ஆட்டோ வாசகம் சொன்னார். அசத்தலாக இருந்தது..
“பெண்ணின் திருமண வயது – அவள் தந்தையின் வருமானத்தைப் பொறுத்தது”
***************************
குறித்த நேரத்துக்கு முன்பே பட்டறைக்குப் போக வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டது. அது ‘மு’வுக்கு பதில் ‘பி’.
அதன்படி சென்று சேர்ந்தபோது பதிவர் முரளிகண்ணன், கேபிள்சங்கர் எல்லாம் அமர்ந்து நுழைவுக்கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள். எந்த உருவத்தைப் பார்த்தால் பயந்து பணம் கொடுத்து விடுவார்கள் என்று உணர்ந்து அதன்படி ஓங்குதாங்கான ஆட்களையே அமர்த்தியிருந்த சிவராமன் அண்ணாவின் சமயோசிதம் பிரமிக்க வைத்தது! (அந்த நேரம் அக்னிபார்வை வந்திருக்கவில்லை என்பதியறிக)
‘அக்னிபார்வைக்கும், எனக்கும் ஒரே டிக்கெட்டா?’ என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது எனக்கு மட்டுமே கேட்டது! (புரியாதவர்களுக்கு: அக்னிபார்வையின் (வினோத்) பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டபோது ஸ்டுடியோக்காரர் சொன்னாராம்.. “மாக்ஸி சைஸ்லதான் வரும் பரவால்லியா?” அப்பேர்ப்பட்ட உடம்புக்குச் சொந்தக்கார்ர் அவர்!)
***************************
பாஸ்கர் சக்தி பேசும்போது ரமேஷ் வைத்யாவைக் குறிப்பிட்டது, குறிப்பிடத்தக்கது. இவரின் முதல் கதையை ‘கதைக்காகா கதை’ என ரமேஷ் வைத்யா விமர்சித்ததைக் குறிப்பிட்டார். அவரது நேர்மையான விமர்சனமே தன்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது என்றார். பாஸ்கர் சக்தி எழுதி விகடனில் வெளிவந்த தக்ளி சிறுகதையை பலர் நினைவு வைத்திருந்தார்கள்.
**********************
பாஸ்கர் சக்தியிடம் ஒரு பதிவர் ‘ஏங்க இப்பல்லாம் காமெடி கதையே வர்றதில்லை’ என்று கேட்டபோது அவரது நண்பரான இன்னொரு பதிவர் ‘நீயெல்லாம் கதை எழுதற-ங்கறதே காமெடிதானே?’ என்று கேட்டதும் ‘கொல்’லென சிரித்தது அரங்கம்! ஆனால் அவர் கேட்டது உண்மையாகவே சீரியஸான கேள்வி!
***************************
கூட்டத்தில் பேச வந்திருந்த நால்வர் பாஸ்கர் சக்தி, சா.தேவதாஸ், யுவன் சந்திரசேகர், பா.ராகவன். இவர்கள் எனக்கெல்லாம் தெரியும் என அமராமல் ஒருவர் பேசும்போது மற்ற மூவரும் அவ்வளவு உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தது கவனிக்க வேண்டிய அம்சமாக இருந்தது. அதுவும் பா.ரா பேசும்போது யுவனும், யுவன் பேசும்போது பா.ரா-வும் வெளிக்காட்டிய முக பாவங்களைக் கவனித்தவர் கற்றாரைக் கற்றாரே காமுறுவருக்கு அர்த்தம் கண்டிருப்பர்.
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘எனக்கெதுக்கு பட்டறையெல்லாம்’ என்பது போல கேமராவும் கையுமாக ஃபோட்டோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள் கேபிள் சங்கரும், ஆதியும். ‘இருடி... முடிஞ்சதும் ஆன் த ஸ்பாட் சிறுகதைப் போட்டி இருக்கு’ என்று பயமுறுத்தியபின்தான் (கேமரா) பொட்டியை மூடிவிட்டு அமர்ந்தார்கள்.
************************
யுவன் பேசும்போது ‘நான் மிகவும் மதிக்கும், பெரிய எழுத்தாளரொருவர்..’ என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பித்தபோது, ‘சாரு தானே?’ என்று கூட்டத்திலிருந்தொரு குரல் கேட்டது. ‘நீங்க இப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுன்னுதானே நான் அப்படியெல்லாம் சொன்னேன்..’ என்று சிக்ஸரடித்தார்!
யுவனின் டைமிங் சென்ஸ் அடிக்கடி க்ளாப்ஸை அள்ளியது!
************************
வலையுலகம் பற்றி கேட்டபோது அதுபற்றிய பேருண்மை ஒன்றை இறுதியில் சொல்கிறேன் என்றார் யுவன். அது, அவர் வலையுலகம் பக்கமே வருவதில்லை என்பதுதான். “எனக்கு யாராவது மெயில் பண்ணினா கூட அவங்களே கூப்ட்டு ‘மெயில் அனுப்பிருக்கேன்’னாதான் திறந்து பார்ப்பேன்” என்று யதார்த்தமாகச் சொன்னது பிடித்திருந்தது. இசை பற்றிய குறிப்புகளுக்காக மட்டுமே இணையம் திறப்பாராம். மற்றபடி நோ நெட்!
**************************
ஆதிமூலகிருஷ்ணன், இடைவேளையில் கார்க்கியோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒட்டுக் கேட்டது:-
ஆதி: “ரெண்டு நாள் போதும்ப்பா.. முடியாதுன்னு சொல்லாத..”
கார்க்கி: “பார்க்கலாம் சகா. ரம்ஜான் லீவுல முடியுமான்னு தெரியல. எப்படியும் டிசம்பருக்குள்ள டேட்ஸ் தர்றேன்”
ஏதாவது பேரிச்சம்பழ விவகாரமோன்னு கொஞ்சம் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டதில் தெரிந்த விஷயம். ஆதி, கார்க்கியை வைத்து மீண்டுமொரு குறும்படம் இயக்க இருக்கிறார். ‘இந்த தடவை ஹெவியான சப்ஜெக்டுங்க’ என்று ஆதி சொன்னபோது கார்க்கி சிரிப்பை அடக்க முடியாமல் திணறியது, மூன்றாவது குறும்படமாக எடுக்க வேண்டிய அம்சம்!
***************************
குறிப்பெடுத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட நோட்டில் ‘சிறுகதை’ என்று பெரிய எழுத்துகளில் எழுதி, ‘இந்தச் சிறுகதைக்கு உங்கள் பின்னூட்டம் தேவை’ என்று ஒவ்வொரு கைகளுக்காய்க் கொடுத்து விட்டுக் கொண்டிருந்தார் ஒரு பதிவர். அதில் நான் ‘மீ த 12த்’ என்று கிண்டலாக எழுதிவிட்டு நிமிர்ந்தபோது பா.ரா. பேசிக் கொண்டிருந்தார்.. “ப்ளாக்ல இந்த மீ த ஃபர்ஸ்ட் ஒரு தீராத வியாதி.. அது எப்ப ஒழியுமோ அப்பதான் உங்களுக்கெல்லாம் நல்லது”
*************************
‘பா.ரா.-வை பார்த்தபின்னாடிதான் ஒரு முடிவுக்கே வந்தேன்’ என்றார் என் நண்பர் ஒருவர். ‘நாளைக்கே..’ என்றவர் ஆரம்பிக்க ‘நாலைஞ்சு கதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பப் போறீங்களா?’ என்று ஆர்வமாய்க் கேட்டேன்.
“இல்லைங்க.. நாளைக்கே என் மீசையை எடுத்துடப் போறேன்.. அவரு பாருங்களேன்.. மீசையை எடுத்த பின்னாடி பத்துவயது குறைஞ்சு தெரியறாருல்ல?” என்றார்.
அது சரி!
********************************************
பி.கு: கூட்டம் முடிந்தபின்னே நண்பர் ஒன்றுகூடி பிக்னிக் போனது மற்றுமொரு நல்ல அனுபவம்!
.
Labels: bloggers meet , short story , அனுபவம் , சிறுகதைப் பட்டறை
என்ன எழுதுவது...?
நேற்றென்னை அழைத்த நண்பர் கேட்டார்: “என்ன கிருஷ்ணா.. கொஞ்ச நாளா பதிவுல தீவிரமா ஒண்ணும் எழுதல? ரைட்டர்ஸ் ப்ளாக் வந்துடுச்சா உங்களுக்கு?”
‘அது ரைட்டர்ஸுக்குத்தானே வரணும்... எனக்கேன்’ என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.
வேலைப்பளுவும், என்ன எழுத என்ற யோசனையும்தான் காரணமின்றி வேறொன்றுமில்லை.
இரண்டு வாரம் முன்பு ஓட்டுக் கேட்க வந்தார் ஒருவர். நானும் என் நண்பனும் வீட்டிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வந்தவரிடம் நட்பு முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் வீட்டுக்கு எதிரில் காலிமனைகளில் குவிந்திருந்த குப்பைகளைக் காட்டி “எலக்ஷனுக்குள்ள இந்த குப்பைகளை எந்த கட்சிக்காரங்க க்ளீன் பண்றாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு!” என்றபோது அந்த வேட்பாளர் முகமலர்ந்து “அடடே.. தம்பி சொல்றது நல்ல யோசனையா இருக்கே” என்றபடி கூட இருந்த தொண்டரடிப்பொடிகள் சிலரிடம் ‘நம்ம பசங்ககிட்ட சொல்லி ரெண்டொரு நாள்ல இதக் க்ளீன் பண்ணீடுங்கப்பா’ என்றார்.
நான் புல்லரித்துப் புளகாங்கிதமெல்லாம் அடைந்து “இல்லைங்க.. ஜெயிச்சப்பறம் அதப் பண்றேன்.. இதப் பண்றேன்னு சொல்றது வேற. இப்பவே இதப் பண்ணினீங்கன்னா அட்லீஸ்ட் ஓட்டுப் போடற அந்த நிமிஷம் எனக்கு ஒரு திருப்தியா இருக்கும் இல்லையா?” என்றெல்லாம் விளக்கம் கொடுத்து..
இதோ இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு மாற்றமுமில்லை. வெட்கக்கேடான விஷயம், அந்த வேட்பாளருக்கு சப்போர்டாக உடன்வந்த, எங்கள் அபார்ட்மெண்டிலேயே குடியிருக்கும் ஒருவர் இதற்குப் பிறகு தன் வீட்டுக் குப்பைகளையும் அங்கேயே கொட்டுவதைப் பார்க்கிறேன்.
என்னால் இந்தப் பதிவு எழுதுவதைத் தவிர வேறொன்றையும் **** முடியவில்லை.
கோவை சென்றிருந்தபோது என் உறவினர் வீட்டில் கிடந்த நோட்டீஸில் ஒரு கட்சிக்காரர் ‘பாரதத் தாயின்மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்’ என்று பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். வெற்றிபெற்றால் இதையெல்லாம் செய்வேன் என்று. அதில் ஒரு வாக்குறுதி கோவை தொகுதியிலுள்ள டாஸ்மாக் வருமானத்தை வைத்தே தொகுதி வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த உறுதிமொழி மதுவிலக்கை அமல்படுத்தக் குரல் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். முரண்!
‘என்னாங்கடா இது?’ என்று வீறுகொண்டு எழுந்து பைக்கை அந்த வேட்பாளர் வீட்டுச் சுவற்றில் மோதி உடைத்துக் கொண்டு அவர் முன் நிறுத்தி அந்த நோட்டீஸை அவர் முகத்தில் விட்டெறிந்து ‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...’ என்று ஆரம்பித்து நீள்வசனம் பேச என்னால் முடியாதென்பதால்...
அதில் குறிப்பிட்டிருந்த அவரது அலைபேசிக்கு அழைத்து ‘என்னங்க.. இதெப்படி சாத்தியம்?’ என்று கேட்க அவர் சொல்கிறார்.
“நான் ரெண்டு சாய்ஸ் குடுத்திருக்கேன் சார். இது இல்லைன்னா அது..” என்கிறார்.
“சாய்ஸ் குடுக்க இதென்ன கொஸ்டின் பேப்பரா? உறுதிமொழிங்க.. அதுவும் யார் மேல குடுத்திருக்கீங்க? ‘பாரதத்தாய் மீது ஆணையிட்டு’ன்னிருக்கீங்க. எல்லாமே விளையாட்டாப் போச்சா உங்களுக்கு?” என்று கேட்டுவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.
அடுத்தநாள் நாளிதழெல்லாம் வாங்கிப் பார்க்கிறேன். பகிரங்க மன்னிப்புக் கோரி அவர் ஏதாவது பேட்டி கீட்டி குடுத்திருந்தால் என் சித்தப்பா வீட்டின் இரண்டு ஓட்டுகளை அவருக்குப் போடச் சொல்லி சிபாரிசு செய்யலாம் என்று.. ம்ஹூம்.
‘டேய் ஒரு சி டி இருக்கு. பார்க்கறியா?’ நண்பர் கேட்டான்.
பார்த்தேன். நான்கு நாட்களாக ஒரு வேலையிலும் மனசு ஒட்டவில்லை. ‘இதை ஏண்டா இப்படி பயந்து பயந்து பார்க்கணும்? இதுல என்ன இருக்கு? எங்கயோ நடக்குற கொடுமையை பார்த்து வருத்தப்படக்கூட பயமா?’ என்று கேட்டால்.. அது தடை செய்யப்பட்ட சி டி யாம். தடை செய்ய அதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. நிர்வாணங்களும், அசிங்கங்களும் பார்க்க எந்த வெட்கமோ, வேதனையோ தேவையில்லை. அதைப் பார்க்கவும், பார்த்ததை ரசித்து எழுதவும் தயார். ஆனால் இந்தக் கண்ணீரையும், ரத்ததையும் பார்த்து அழ நமக்கு உரிமையில்லை. பயம். பயம்.
அதிகபட்சமாக ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ என்று காலர்ட்யூனை மாற்ற மட்டுமே முடிகிறது நம்மால். ச்சே!
நான் சொன்ன மூன்று நிகழ்வுகளிலும் என்ன செய்ய முடிந்திருக்கிறது என்னால் என்று யோசித்தால் வெட்கம் மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த லட்சணத்தில்... என்ன எழுத?
அவியல் 20.04.2009
எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வட இந்திய நண்பர் ஒருவர் தமிழ் கற்று வருகிறார்.
ஒரு நாள் வேகமாக வந்தவர் ‘என்ன means what ?’ என்றார். நானும் ‘என்ன means what’ என்றேன். இரண்டு முறை இதையே சொன்னதும் சிரித்தவர், ‘ஓ என்ன மீன்ஸ் க்யாவா’ என்றபடி சென்றுவிட்டார்.
மற்றொரு நாள், நீர் மாசுபடுவதால் எற்படும் பாதிப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆண்டுதோறும் 1 மில்லியன் குழந்தைகள் அசுத்த நீரால் இறப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது என்றேன். ‘Who said this?’ என்றார். நானும் ‘Who said this’ என்றேன். இந்த முறை அவருக்கு புரியவே இல்லை.
WHO என்றால் World Health Organization.
*************************
நண்பர்களுடன் உணவகத்தில் சென்றிருந்தபோது நடந்தது இது. சிக்கனை வெட்டிய நண்பன், மீன் வேண்டாமென்றான். அவனுக்கு sea food பிடிக்காதாம். அடுத்தவனை, சீ ஃபுட் சாப்பிடுவியா எனக் கேட்டா போது “sea food மட்டுமல்ல், see food எல்லாத்தையும் சாப்பிடுவேன்” என்றான். வடிவேலு நினைவுக்கு வந்தார்.
இது கடலெண்ணய்தானே???????
*******************************************************
ஐ.பி.எல். அதிரடியாய் தொடங்கிட்டது என்றுதான் முதலில் டைப் செய்ய நினைத்தேன். முதல்நாள் ஆட்ட்டங்களில் அதிரடி இல்லை. தென்னாப்ரிக்கா மைதானங்கள் அப்படி. ஆனால் நான் சொல்ல வந்தது, களமிறங்கும் முன் உத்தப்பா செய்ததை கவனித்தீர்களா? காலால் தரையில் சிலுவை போட்டு கும்பிட்டுவிட்டு வந்தார். நம்ம ஸ்ரீகாந்த் சூரியனை பார்த்து கும்பிடுவார். யாரோ ஒரு நடிகர் கூட தன் அலுவலகத்தில் தாம்ஸ் ஆல்வா எடிசனின் படத்தை மாட்டி வைத்திருப்பதாக படித்த ஞாபகம்.
நான் தினமும் கும்பிடுவது சார்லஸ் பாபேஜ்.
இது நல்லெண்ணய்தானே??????
*****************************************************
கிரிக்கெட் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.1987ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தது கபிலின் தலைமையிலான இந்திய அணி. இரண்டாம் டெஸ்ட்டில் ஸ்ரீகாந்திற்கு பதிலாய் சப்ஸ்டியூட் ஒருவர் ஃபீல்டிங் செய்தார். சில ஓவர்களில் ஸ்ரீகாந்த் வந்துவிட இவர் வெளியே செல்ல மறந்துவிட்டார். 12 பேருடன் சில ஓவர்களும் வீசப்பட்டன. நடுவர் கண்டறிந்து சொல்ல, இருவரும் வெளியேறினார்கள்.
வெறும் 10 பேருடன் ஒரு பந்து வீசப்பட்டது.
இது வெளக்கெண்ணய்தானே??????
*************************************
அன்புமணி இனி மந்திரி ஆகவே முடியாது என்பது சினிமாக்காரர்களுக்கு தெரிந்து விட்டது. இனி நானும் திரையில் சிகரெட் பிடிப்பது போல நடிக்க மாட்டேன் என்ற ’அசல்’ ஹீரோ அஜித் சுருட்டுடன் ஒளிர்கிறார் அசல் ஸ்டில்களில். பூஜைக்கு வந்த சூப்பர்ஸ்டாரும் அந்தப் படங்களை பார்த்துவிட்டு அசல் ஹீரோ அஜித் என்றாராம்.
நல்லவேளை வில்லன் பூஜைக்கு சூப்பர்ஸ்டார் வரவில்லை.
இது தேங்காயெண்ணய்தானே????? (தலைக்கு தடவுவதால்)
*******************************************
கவிதை வேண்டாமென்றுதான் நினைத்தேன். பசுவய்யாவின் இந்தக்
கவிதை..ம்ம்ம்
வருத்தம்
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
இது என்ன எண்ணெய்?
**********
Labels: அனுபவம் , அவியல் , நிகழ்வுகள்
அவியல் - 26.03.2009
குறும்படங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ‘வித்தியாசமான கான்செப்ட் கெடச்சாதான் பண்ணணும்’ என்றார் ஆதிமூலகிருஷ்ணன். ’அதென்னங்க வித்தியாசமான கான்செப்ட்?’ என்றதற்கு ஒரு ஆங்கிலக் குறும்படம் பற்றிச் சொன்னார்.
THE BLACK HOLE
அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் முன் நிற்கிறான் அவன். ஏதோவொரு பேப்பரை நகலெடுக்க முற்பட, பெரியதொரு பேப்பரில் மிகப்பெரிய கருப்பு வட்டம் மட்டுமே வெளிவருகிறது. ஒன்றும் புரியாமல் அதை எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு, குடித்துக் கொண்டிருந்த காபி கோப்பையை கருப்பு வட்டத்துடன் வெளிவந்த அந்தப் பேப்பர் மேல் வைக்க…. அந்தக் காபி கோப்பை - பேப்பரின் கருப்பு வட்டத்திற்குள் விழுந்துவிடுகிறது!
இதென்னடா அதிசயம் என்று அந்தப் பேப்பர் மேல் கைவைக்க.. அவனது கை உள்ளே சென்று அந்தக் காபி கோப்பையை எடுக்க முடிகிறது அவனால்.
அதிசயித்தவாறே.. அருகிலிருக்கும் பூட்டப்பட்ட ஃபிரிட்ஜ்ஜில் அந்தப் பேப்பரை வைத்து கருப்பு வட்டத்தில் கைநுழைத்து ஃப்ரிட்ஜினுள் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.
அலுவலகத்தில் யாரும் இல்லை. சட்டென யோசனை செய்த அவன், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டின் லாக்கர் அறைக்குள் நுழைகிறான். லாக்கர் மீது அந்தப் பேப்பரை வைத்து கைநுழைத்துப் பார்க்கிறான். கை உள்ளே போகிறது. பணத்தை எடுத்து எடுத்து வைக்கிறான். இன்னும் இன்னும் என்று கைவிட… நீ…ளமான லாக்கர்.
அருகிலிருந்த செல்லோ டேப்பினால் அந்த அதிசயப் பேப்பரை லாக்கர் மேல் ஒட்டிவிடுகிறான்.
பிறகு அந்த கருப்பு வட்டத்தில் மெதுவாக தலையை நுழைத்து உள்ளே போகிறான். தலை… கைகள்…. இடுப்பு.. கால் என முழுவதுமாக உள்ளே போக...
கடைசியாக கால் நுழையும்போது ஷூ தட்டி… வெளியே ஒட்டப்பட்டிருந்த அந்தப் பேப்பர்…
வி ழு ந் து வி டு கி ற து!
அவ்வளவுதான் படம்!
வெறும் 2 நிமிடம் 27 செகண்ட்தான் இந்தப் படம். ஒரே ஒரு கேரக்டர். இன்னும் மனதைவிட்டகலாமலிருக்கிறது!
எதுக்கு இவ்ளோ விளக்கம்.. நாங்களே பார்த்துக்கறோம் என்பவர்களுக்கு... இதோ லிங்க்... THE BLACK HOLE
******************************
நேற்றைக்கு ஐ.பி.எல் பற்றி எழுதியிருந்தேன். தலைப்பு ‘மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு’ என்று வைத்திருந்தேன். இந்தத் தலைப்பிலிருந்து நுட்பத்தை எந்த நுட்ப வாசகரும் கவனிக்கவே இல்லை. ஆசிஃப் மீரான் அண்ணாச்சியிடம் புகார் குடுத்திருக்கிறேன். கமிஷன் வைத்து விசாரணை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.
**********************************
சர்தார்ஜிகளை வைத்து ஜோக் எழுதுவதை அவ்வளவாக நான் விரும்பவில்லை என்றேன் நேற்று அலுவலக கலந்துரையாடலில். (வேலையே செய்யறதில்லையாடா நீ-ன்னு கேக்காதீங்க. இது ப்ரேக் டைம்ல!) சமீபத்தில் டெல்லி சென்று வந்த ஒரு சீனியர் ஸ்டாஃப் சொன்னார்… இவர் தங்கியிருந்த அறை அருகே ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் காலை டிஃபன் நன்றாக இருந்ததாம். பிடித்துப் போன இவர் ஹோட்டல் முதலாளியான சர்தார்ஜியிடம் கேட்டாராம்..
“ப்ரேக்ஃபாஸ்ட் கித்னா பஜேதக் மிலேகா?”
அவர் சொன்னாராம்….
“ஹோதோ மிலேகா…. ராத் தஸ் பஜே தக்”
இந்த சீனியர் ஸ்டாஃப் பற்றி ஒரு துணுக்கு சொல்ல வேண்டும். ‘அதெப்படி சார் டெய்லி ஷேவ் பண்ணீட்டு வந்துடறீங்க?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னார்.. ‘நான் காந்தியவாதிங்க’
‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘ஒரு நாள் ஷேவ் பண்ணலீன்னாலும் வெள்ளைக்காரன் வெளில வந்துடறான்’
******************************
ஒரு கிசுகிசு…
என்னை தமிழ்மண நட்சத்திரம்னு காலாய்ச்ச அவரு ஒரு வாரமா தூங்கலியாம். ‘இது நெஜமா.. இல்ல நம்மளையும் யாராவது கலாய்க்கறாங்களா’ன்னு.
திங்கட்கிழமை தெரிஞ்சுடப் போகுது!
***********************
முகுந்த் நாகராஜன் எழுதிய ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது என்ற கவிதைத் தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன்.
(உயிர்மை வெளியீடு. ரூ 40) எல்லாமே சிறந்த கவிதைகள். உமாவிடம் படிக்கச் சொல்லி இரண்டு சிறந்தவற்றைச் சொல்லேன் என்றேன்.
இதோ….
*
மனப்பாட மீன்குட்டி
குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன.
கண்ணாடித் தொட்டியில் மீன்குட்டியைப் போல்.
*
தூங்குகிறாள்
சிரித்து விளையாடி
களைத்துப் போய்
தூங்குகிறாள் குழந்தை.
கனவில் அவள் ஆடும் ஆட்டம்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
ஈரமான சின்ன உதடுகளின் வழியாக.
*
இந்த இரண்டைத் தேர்வு செய்ததன் காரணம் கேட்டேன். முதலாவது மூத்த மகள் மீராவையும், இரண்டாவது மேகாவையும் நினைவுபடுத்தியது என்றார்.
அதுதான் கவிதையின் வெற்றி!
ஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009
நேற்றைய கிசுகிசுவை ஏறக்குறைய எல்லாரும் கண்டுபிடித்தாலும் ஒன்றரண்டை மிஸ் பண்ணியிருந்தார்கள்.
இதோ...
பெயரை மாற்ற விரும்பும் பதிவர் – நம்ம தாமிரா! ஆமாங்க.. அதே பேர்ல ஒரு எழுத்தாளர் இருக்கறதால பல குழப்பங்களும், இவருக்கு கிடைக்கற திட்டு அவருக்கு கிடைக்கறதாவும் தகவல். அதுனால இந்த முடிவு. உங்களுக்கு நல்ல ஐடியா தோணினாலும் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி சைடில்.
2. கார்க்கி – பரிசல்
3. நர்சிம்-பரிசல் (வழக்கமா ஆயிரம் மெய்ல் வந்தது... நூற்றுக்கணக்கான ஃபோன் வந்ததுன்னு பீலா விடுவேன். நெஜமாவே நேத்து நர்சிம்மை ‘ஸ்டிக்கர் பதிவர்’ன்னு ஏன் சொன்னீங்கன்னு நிறைய ஃபோன் கால்! ஸ்டிக்கருக்கான காரணம்... பதிவின் கடைசியில் காண்க!)
4. வால்பையன் – பிறந்தநாள் தோழர் அதிஷா – நன்றி சொல்ல மறந்த பதிவர் ஈரவெங்காயம். (இதுக்கு கார்க்கி, வெண்பூன்னு சொல்லியிருந்தாங்க... ஆமா... வெண்பூக்கு கார்க்கி ப்ளாக்லேபிள் ஃபுல் வாங்கிக்குடுத்தாரா என்ன? சொல்லவேல்ல?!?)
5. அதிஷா 6. கேபிள் சங்கர் 7. யெஸ். பாலபாரதி –முரளிகண்ணன்
கடைசில சொன்ன அடுத்தவார தமிழ்மண நட்சத்திரம்....? வெய்ட் அண்ட் சீ!
*************************
புதிய பார்வை ஆசிரியராக பாவை சந்திரன் இருந்தபோது நம்ம ரமேஷ் வைத்யா இசை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி.. டிசம்பர் சீசனில் எழுத வாய்ப்பு கேட்டிருக்கிறார். ‘மாலை அஞ்சு மணிக்கு வர்றீங்களா?’ என்றிருக்கிறார் பாவை சந்திரன்.
மாலை ஐந்து மணிக்கு இவர்கள் போனபோது..
“யார் நீங்க?” என்றிருக்கிறார். நண்பர் ஹரிகுமாரோடு போன இவர் மறுபடி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ‘இசைக் கட்டுரை சம்பந்தமா...”
“ஓ! இன்னும் படிக்கல. காலைல பத்து மணிக்கு வர்றீங்களா?”
காலை பத்து மணிக்கும் அதே யார் நீங்க கேள்வி... இவர்கள் அறிமுகப்படலம் எல்லாமே அரங்கேறியிருக்கிறது. எல்லாம் முடிந்து மறுபடி அடுத்த நாள் காலை பத்து மணிக்கு கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மறுபடி யார் நீங்க... மறுபடி அறிமுகங்கள்..
இதே தொடர்ந்து நாலைந்து நாளாக நடக்க... ஆறாவது நாள் பாவை சந்திரன் 'யார் நீங்க’ எனக் கேட்டதும் ரமேஷ் வைத்யாவின் நண்பர் ஹரிகுமார் சொன்னாராம்..
“புதிய பார்வைங்கற பத்திரிகைக்கு நீங்க ஆசிரியரா இருக்கறது ரொம்பப் பொருத்தம் சார். ஒவ்வொரு முறையும் ‘புதிய பார்வை' பார்த்து யாரு.. யாருன்னு கேட்கறீங்க”
பின் குறிப்பு: ‘இதை அவியல்ல போடறேண்ணா’ என்று ரமேஷ் வைத்யா அண்ணனிடம் கேட்டபோது அவர் சொன்னார்.. “ஏன்... அறிஞர்கள் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள்’னு எழுதிப் போட மாட்டியா?”
ஆச..தோச..அப்பளம்..வடை!
********************
உஷா பத்திரிகை அலுவலகத்துக்கு டி.ராஜேந்தர் வரும்போதெல்லாம் (அந்த பத்திரிகை இருந்தப்போ!) ஒரு டயலாக் சொல்வாராம்...
“சர்க்குலேஷனை மேல ஏத்தணும்யா... இப்ப இருக்கற ட்ரெண்டை மாத்தணும்யா”
– இதைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.
ஒரு நாள் அங்கே இருக்கும் டேபிள், சேரையெல்லாம் எடுத்து வந்து கொண்டிருந்தார்களாம்.
“என்ன நடக்குது” என்று நண்பர் ஒருவர் கேட்க.. சொன்னார்களாம்..
“அதான் சர்க்குலேஷனை மேல ஏத்தணும், மேல ஏத்தணும்னு சொன்னாருல்ல... அதான் சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டை மேல-மூணாவது ஃப்ளோருக்கு ஷிப்ட் பண்றாங்க”
*******************************
அகர்வால் கண் மருத்துவமனையில் வாசல் கதவு ஒரு கண்ணின் அமைப்பில் இருக்கும். அதாவது கண் பாவையினூடே பார்வையாளார்கள் நுழைவது போல..
மருத்துவமனையைத் திறந்து வைத்தவர் அப்பல்லோ மருத்துவமனையிலன் கைனகாலஜிஸ்ட். திறந்து வைத்துப் பேசும்போது அந்த நுழைவாயிலைப் பாராட்டி இப்படிச் சொன்னாராம்...
“நல்லவேளை.. அகர்வால் என் துறையில் இல்லை!”
*****************************
சென்றவாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த வால்பையனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். “ஸ்டாரா இருந்தீங்களே.. நல்ல முன்னேற்றம் இருக்கும்ல?”
”இல்ல பரிசல்... அதே நம்ம வழக்கமான ஆட்கள்தான் பின்னூட்டியிருந்தாங்க”
“ஓஹோ... பின்னூட்டத்த விடுங்க... ஆனா ஹிட்ஸ் ஏறியிருக்குமே..”
“ஹும்.. BUDS இருந்தாக்கூட காது கொடயலாம். HITSஐ வெச்சுட்டு என்ன பண்ண?”
*****************************
யாவரும் நலம் இந்தியில் 13B என்ற பெயரில் வந்திருக்கிறது. மாதவன் 13 Bயாவது ஃப்ளாட்டில் குடியிருப்பதாய்க் காட்டியிருக்கிறார்கள். B கூட எழுதும்போது 13ன் வடிவத்தில் வருவதால்தான் என்கிறார்கள். 13 ராசியில்லாத நம்பரா என்று பேசிக்கொண்டிருந்தாபோது நம்ம தமிழ்நாட்ல வாக்குப்பதிவு மே 13தானே’ என்று நண்பர்கள் சொன்னார்கள்.
நல்லா நடக்கணும் தேர்தல் என்று வேண்டிக் கொள்கிறேன். ஏதாவது கலவரம், அசம்பாவிதம் நடந்து மே13 கருப்பு நாளாக ஆகிவிடக்கூடாதே என்ற வருத்தம்தான்.
‘யாருக்குமில்லாத அக்கறை உனக்கேன்’னு கேட்கறீங்களா...
என் பொறந்த நாள்ங்க அது!
********************************
அவியலுக்கு மேட்டர் சேகரிப்பது ஒவ்வொரு முறை கஷ்டமாக இருக்கும். ‘சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என் மின்னஞ்சலில் - kbkk007@gmail.com”என்று விளம்பரம் கொடுக்கலாமா என்றெல்லாம் யோசித்ததுண்டு. ரமேஷ் வைத்யா போன்ற சகலகலா வல்லவர்கள் நட்பிருப்பதால் தப்பித்து வருகிறேன். முடிந்தவரை பிரபலமானவர்கள் வாழ்வென்று இல்லாமல்.. நம்மோடே இருக்கும் நண்பர்கள் சந்திக்கும் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது!
இந்த வாரம் கொஞ்சம் ஈஸியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
***********************
நர்சிம்மை ஸ்டிக்கர் பதிவர் என்றதன் அர்த்தம்:-
ஸ்டிக் = கம்பு
ஸ்டிக்கர் = ?
கம்பர்!
அதுவுமில்லாம அவர் யார்கூட பழகினாலும் டக்னு ஒட்டிக்குவார்ங்க! அதான்!
அடி விழறதுக்குள்ள ஓடிடறேன்!
************************
Labels: Aviyal , அனுபவம் , அவியல் , நிகழ்வுகள்
எண்ணிப் பார்க்கிறேன்!
“இரவு இந்த நேரத்திலும் தமிழையும், உன்னை நம்பி வரும் வாசிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டியும் நீ ஆற்றும் சேவை என்னைப் புல்லரிக்க வைக்கிறது பக்தா.. என்ன வரம் வேண்டுமென்று கேள்!”
“மஹாப்ரபோ!.. இந்த ஒரு பதிவு மட்டும் என் மனைவி கண்ணில் படாமல் தப்பிக்க வழிசெய்யுங்கள் ஸ்வாமி”
“அப்படியே ஆகட்.... 'ஹலோ... யெஸ்.. மகாவிஷ்ணு ஸ்பீக்கிங்.. ஆங்.. சொல்லு லக்ஷ்மிம்மா... இல்ல இங்க பரிசல்காரன்னு ஒருத்தன்... ஆங்... அதான்.. அதேதான்.. இல்லம்மா.. அது வந்து.. நீ சொல்லி கேட்காமயா? ஓக்கே.. ஓக்கே..’ ஸாரி பக்தா... உமா லக்ஷ்மியின் பக்தையென்று தெரியாமல் உனக்கு வரமளிக்கவிருந்தேனே... மீ த எஸ்கேப்பூ”
******************************
ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலிடம் வகிப்பது இந்த சைட் அடித்தல்தான். கன்னியர் கடைக்கண் பார்வை பட்டால் என்ன ஆகுமென்று சொல்லாத இலக்கியமில்லை.. ஆட்டோக்கள் இல்லை!
அப்படி என்ன இதில் இருக்கிறது?
‘மனங்கவர்ந்த ஒரு பெண்ணைக் கண்டால் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் ‘அட.. சூப்பர் ஃபிகர்டா’ என்று அட்ரினல் சுரப்பிகளுக்கு அவசர தந்தி கொடுக்க, அந்தச் சுரப்பியிலிருந்து அட்ரினலின் என்ற சமாச்சாரம் பெருக, இதயம் படபடத்து.. வியர்வை பெருக..”
ஹலோ.. சுஜாதா சார்... அதில்ல நாங்க கேட்கறது.. சைட் அடிக்கறதுங்கறது வேற. நீங்க சொல்றது காதலன், காதலியைப் பார்க்கறப்போ.
சைட் அடிக்கறதுல ஒரு சௌகரியம் என்னன்னா.. நாம் சைட் அடிக்கற பொண்ணு மேல நமக்கு எந்த ரெஸ்பான்ஸிபிலிடியும் இருக்கறதில்ல. பார்த்தமா.. போய்ட்டே இருந்தோமான்னு இருக்கும்.
நான் மொத மொதல்ல சைட் அடிச்ச பொண்ணு பேரு நல்லா ஞாபகம் இருக்கு. ஆனந்தி. எப்போ.. அஞ்சாங்க்ளாஸ்ல! ஒரு தடவை அவ, ஸ்கூலுக்கு லீவு போட்டப்போ, என் க்ளாஸ் டீச்சர் ‘நாளைக்கு அவ வர்றப்போ இந்தக் கணக்கைப் போட்டுட்டு வரச் சொல்லு. உன் நோட்டைக் குடு’ என்று என்னிடம் சொன்னார். என் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி அவள் வீடு. வீட்டிற்குப் போனது, கை, கால் கழுவி.. என்னிடம் இருந்த ஒரே ஒரு வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு பவுடர் அப்பிக்கொண்டு போய் அவள் வீடு முன் நிற்க வெளியே வந்து ‘வேணாம். நான் சுப்புலக்ஷ்மிகிட்ட வாங்கிக்கறேன்’ என்றுவிட்டு மறுபடி வீட்டிற்குள் ஓடிவிட.... ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்’ என்று என்னை உள்ளிருந்து ஒருத்தன் கிண்டலடித்தான்.
சிறிதுகாலம் தொடர்ச்சியாக ஒரே பெண்ணை சைட் அடித்த வரலாறு என்று எடுத்துக் கொண்டால் பஸ் ஸ்டாண்டுக்கருகில் நாங்கள் நண்பர்கள் கூடும் ஒரு கடை வழியே தினமும் செல்லும் ஒரு பெண். மாநிறம். (‘போடா.. அவ கருப்பு. நீதான் மாநிறம்னு சொல்லிக்கற’ என்பான் சசி) எட்டு என்றுதான் பெயர் வைத்திருந்தோம். எட்டு போடுவதுபோல கால்களைப் பின்னிப் பின்னி நடப்பாள். அழகாக இருப்பதாகத் தோன்றியது. எங்கள் இடத்தைக் கடந்து செல்லும்போது அவள் பார்க்கும் பார்வை... இன்னும் கண்ணில்... இல்லை! (மஹாவிஷ்ணு வேற வரம் குடுக்காம எஸ்கேப்பாய்ட்டாரு. எதுக்கு வம்பு!) விவேக்-ரூபலா உதவி இல்லாமலே துப்பறிந்து பெயர் மகேஸ்வரி என்று கண்டறிந்தோம்.
ஒரு சுபயோக சுபதினத்தில் ‘பேசிப் பார்த்தாத்தான் என்ன?’ என்று தோன்ற, தொடர்ந்து போக பஸ் ஸ்டாண்டில் அவள் ஊர் டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தவளை நெருங்கி.... டக்கென்று கடந்து போய்விட்டேன். ‘என்னடா.. பேசலியா?’ என்ற நண்பனிடம் ‘ப்ச்.. பேசிட்டா இப்போ இருக்கற த்ரில்லும் போயிடும். நானென்ன அவளை லவ் பண்ணவா போறேன்? விடுடா’ என்றேன். அடுத்தடுத்த நாட்களில் அவளை அந்த வழியே காணவில்லை.
எங்கள் நண்பர் நாகராஜின் பாக்யா ஆர்ட்ஸுக்கு ஒரு ஆர்டர் சம்பந்தமாக வந்திருந்த பெண்களில் தீபா என்ற பெண் என்னிடம் உரிமையோடு பேசுவாள். அடிக்கடி தோழிகளோடு வரும் அவளை நல்ல நண்பியாக நினைத்திருந்தேன். என் நண்பன் சசி அவளைக் காதலிப்பதாகச் சொல்ல.. ‘சரிடா.. நான் பேசறேன்’ என்று சமாதானப்படுத்தினேன். ஒரு நாள் அவளிடம் சொல்ல... அவள் ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டாள். அடுத்த நாள் அவளது தோழி ஒருத்தி வந்து ‘தீபா உங்களை ரொம்ப நாளா சைட் அடிச்சுட்டு இருக்கா. (இப்படித்தான் சொன்னாள்!) நீங்க என்னடான்னா சசிக்காக பேசினீங்களாம்’ என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். ‘என்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்க வண்டில ஒரு நாளாவது போய் காலேஜ் வாசல்ல எறங்கணும்’ என்று கோரிக்கை வைத்திருந்தாள். (டி.வி.எஸ்.சாம்ப்!) என்ன விநோதமான கோரிக்கைடா என்று நினைத்தபடி ‘வண்டில போய் எறங்கணும் அவ்ளோதானே.. இங்க வைக்கறேன். நாளைக்கு அவளை எடுத்துப் போகச் சொல்லு’ என்றேன் நான்.
இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு ஹோட்டல் முன் தீபா தனது குழந்தையுடன் நிற்க நான் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பைக்கில் அவளது கணவன் வர ‘வந்துட்டார். வண்டில போய் உட்காருங்க’ என்றபோது அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்! ஒருவேளை அவளும் தன் கணவனிடம் சொல்லியிருக்கக்கூடும்!
காலச் சக்கரம் சுழல்கிறது.....
இரண்டு நாட்கள் முன் நடந்த பள்ளி ஆண்டுவிழாவில் என் மகள் தாவணி உடுத்தி ஆடுகிறாள். ‘இவ்ளோ சின்னப் பொண்ணுக்கு இந்த ட்ரஸ்ஸா’ என்றபடி வியக்கிறேன் நான். நாளை அவளோடு நான் நடந்து செல்கையில் கடந்து செல்லும் இளைஞர்கள் அதே கடைக்கண் பார்வையை வீசக்கூடும். எப்படி உணர்வாள் அவள்? எப்படி எதிர்கொள்வேன் நான்? எதுவும் கேட்பாளா என்னிடம்? என்ன சொல்ல வேண்டும் நான்? எத்தனை திரைப்படம் பார்த்து ‘இப்படித்தான் அவங்கப்பன் டீல் பண்ணியிருக்கணும்’ என்று வியாக்கியானம் பேசுகிறேன். என் மகளுக்கு என்ன அறிவுரை தரப்போகிறேன்? பாலகுமாரன் படி.. ருத்ரன் படி.. சொல்லலாம். ‘என்ன ஞானத்தை நீ பெற்றாய்? எனக்குச் சொல்லிக்குடு’ என்று நிற்பாளே அவள்... ‘நீங்களும் இப்படித்தானாப்பா? பொண்ணுங்களை ஃபாலோ பண்ணியிருக்கீங்களா’ கேட்பாளே....
என்ன சொல்ல?
கேள்விகள்.... கேள்விகள்.... காலம் மட்டுமே விடை சொல்லும் கேள்விகள்.
அவியல் 04.03.09 – 200ம் 250ம்...!
நேற்றைக்கு என் வலைப்பூவை பின்தொடரும் ஃபாலோயர் லிஸ்ட் 200ஐத் தாண்டியது. மிகவும் கௌரவமாகவும் நெகிழ்வாகவும் உணர்கிறேன். நேற்றைய பின்னூட்டத்தில் வாழ்த்திய சிலர் 250 பதிவுகள் என்று வாழ்த்தியபோதுதான் கவனித்தேன்.. இந்தப் பதிவு 250வது பதிவு. எனது 250வது பதிவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டி இருக்கவேண்டும் என்று நினைத்தேன். எந்திரன் ஷூட்டிங்கில் பிஸியாம். ‘ப்ளீஸ் கிருஷ்ணா.. நான் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டுங்கறது வெளீல தெரிய வேண்டாமே” என்று வேறு சொல்கிறார். ம்ம்ம்.. என்ன செய்ய.. போனாப் போகுதுன்னு அவியலே போட்டுடலாம்னு முடிவு பண்ணி.. இதோ...!
200க்கும் 250க்கும் பார்ட்டி எப்போ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய நண்பர்கள் எல்லாரும்... எங்கிருந்தாலும், பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளவும். வாட்டர் தெரபி ஈஸ் பெஸ்ட்.. யு நோ?
**********************
மகள்களின் ஸ்கூலில் ஆண்டுவிழா. முடித்து வெளியே பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தபோது எனக்கு முன்னால் ஒரு தாய், அவரது மகளை அடித்ததற்கு கணவன், ‘ஏய்.. எதுக்கு புள்ளயப் போட்டு அடிக்கற?’ என்று கேட்டார்.
“சும்மா இருங்க. உங்களுக்கென்ன தெரியும்? அந்தக் கார் எவ்ளோ வேகமா போச்சு.. இவ பாட்டுக்கு ஓடறா?”
“அதுக்கு அடிச்சா சரியாப் போச்சா?”
இந்த இடத்தில் இடைமறித்தார், கணவன் வாகனத்தை எடுத்து வர காத்திருந்த இன்னொரு பெண்.. அவர்கள் குடும்ப நண்பியாய் இருக்க வேண்டும்.
“சும்மா இருங்க. உங்களுக்கெல்லாம் நாங்க அடிக்கறதுதான் தெரியும். எதுக்கு அடிக்கறோம்னு தெரியாது. அடிச்சா அதுல எவ்ளோ பாசம் இருக்குன்னு எங்களுக்குத்தான் தெரியும்”
“அப்போ அடிச்சா பாசம் ஜாஸ்தின்னு சொல்றீங்களா?”
“நிச்சயமா”
உடனே தனது மனைவியை நோக்கி.. “பார்த்துட்டியா என்ன சொல்றாங்கன்னு. அடிச்சா பாசம் ஜாஸ்தியாம்” என்று சிரித்தபடி சொல்ல..
அவரது மனைவி சொன்னார்...
“ம்ம்.. வீட்டுக்கு வாங்க. யாருக்கு பாசம் ஜாஸ்தின்னு காட்டறேன்”
அவியலுக்கு ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷத்தோடு நான் எஸ்கேப்பானேன்!
******************************
ஏர்டெல்லின் புதிய விளம்பரம் பற்றி எழுதலாம் என்றால் ஏற்கனவே இந்த வார காக்டெயிலில் கார்க்கி எழுதிவிட்டார். கலக்கலான விளம்பரம் அது. ‘இந்தக் குழந்தைய விட்டுட்டு அவங்கப்பனுக்கு டெல்லி போகாட்டிதான் என்ன?’ என்று கேட்கவைத்தது.
இன்னொரு அசத்தல் விளம்பரம்... மிரிண்டா. தன்னை, பெண் பார்க்க வந்த பையனின் அப்பா பாடத் தெரியுமா என்று கேட்க.. வீணை எடுத்து வந்து.. அழகாக சுருதி பிடித்து... டமீலென்று ‘யம்மாடி.. ஆத்தாடி..ஒன்ன எனக்குத் தரியாடி’ என்று டப்பாங்குத்து குத்துகிறார். அசினின் நடிப்பு பிரமாதம். அதைவிட, அதை மாப்பிள்ளை ரசிப்பதாக காட்டிய க்ரியேட்டிவிட்டி அதைவிட பிரமாதம். (அவரு முகத்தைப் பாருங்க... அவ்ளோ ரசிப்பார்)
அதோடு நிற்காமல்.. ‘அடுத்து ஆடத் தெரியுமான்னுதானே கேப்பீங்க’ என்றுவிட்டு எழுந்து போடுகிறார் பாருங்கள் ஒரு ஆட்டம்....
அலப்பறை!
*******************
செல்ஃபோனில் SMS அடிக்க நான் எப்போதுமே T9 டிக்ஷனரியைத்தான் பயன்படுத்துவேன். மிகவும் வேகமாகவும், சுலபமாகவும் அடிப்பேன். ஒரு வார்த்தையை அடிக்க, அந்தந்த எழுத்துகள் இருக்கும் எண்களை ஒருமுறை அழுத்தினாலே.. வார்த்தைகளைக் கோர்க்கும். ஒரே எழுத்துக் கோர்வையில் பல வாசகங்கள் இருந்தால்.. ஸ்டாரை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
இதில் KISS என்பதை அடித்தால் முதலில் வருவது வேறு வார்த்தை. ஆனால் சம்பந்தம் இருக்கிற வார்த்தை! என்ன ஒரு ஒற்றுமை என நான் நினைப்பதுண்டு!
ஒரு க்ர்யேடிவிட்டிக்காகத்தான் குறிப்பிட்டேன். யாரும் திட்டித் தீர்த்துடாதீங்கப்பூ.. நான் பச்சப்புள்ள...
***************************
அண்ணே - எம்.எம்.அப்துல்லா அனுப்பிய சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகம். ராமானுஜம் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த பல விஷயங்களை பதிவு செய்த இப்பேர்ப்பட்ட புத்தகம் என்ன விலை இருக்கும் (நம்ம புத்தி!) என்று பார்த்தால் ‘த.மு.எ.ச. 11வது மாநில மாநாட்டிற்காக எம்.எம். அப்துல்லாவும் அவரது தோழர் பிரகதீஸ்வரனும் இலவசமாக வழங்கியது.. விற்பனைக்கல்ல’ என்றிருந்தது!
அதில் இருந்து ஒரே ஒரு சொற்சித்திரம்....
பிரிவினையின்போது ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்க ஒரு கூட்டம் செல்ல.. அந்தக் கூட்டத்திலிருந்த ஒல்லியான மனிதன் ‘இந்த வீட்டில் நிறைய செல்வங்கள் இருக்கின்றன. பொறுமையாக நாம் கொள்ளையடிதுப் பிரித்துக் கொள்வோம்” என்கிறான். கூட்டம் ஆர்ப்பரித்து அவனைப் பின்பற்றுகிறது. இது இங்கே இருக்கிறது.. இதன் விலை இவ்வளவு என்றெல்லாம் கூறியவாறே அவன் அந்தக் கூட்டத்தை வழிநடத்துகிறான். எல்லாம் முடிந்து அவனை ‘ஆமா.. நீ யார்?’ என்று கேட்க அவன் சொல்கிறான்.
“இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்”
*************************
பதிவுலகுக்கு வந்து நான் எழுதாமல் தள்ளித் தள்ளிப் போவது இளையராஜாவுடனான எனது நெருக்கத்தைத்தான். (நேரிலல்ல.. பாடல்கள் மூலம்) ரகுமான் ஆஸ்கார் வாங்கியபோது அவருக்கு (ராசாவுக்கு) ஒரு கடிதம் மாதிரி ஒன்று எழுதி... முடிக்காமல் வைத்திருந்தேன். ‘நம்ம தமிழன் ஒரு அவார்ட் வாங்கிருக்கான்யா.. நீங்க கூப்ட்டு பாராட்டினா நல்லா இருக்கும்ல? எங்களுக்கிருக்கற சந்தோஷம் உங்களுக்கில்லையா ஐயா?” இப்படியெல்லாம் போகும் அந்தக் கடிதம். ஏனோ.. பதிவிடவில்லை. நேற்று சர்வேசனின் இந்தப் பதிவைப் படித்ததும் மிக மகிழ்ச்சியுற்றேன்!
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
******************
குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் பாடல்களில் யுவன் பாடிய ‘கடலோரம் ஒரு ஊரு' ஹிட். ஆனால் எனக்கு அதைவிட வேல்முருகன் என்பவர் பாடிய ‘என் ராசாத்தி கிளியே..' பாடல் அத்தனை அத்தனை பிடித்தது. என்ன ஒரு சோகமான பாடலுக்கு, என்னா ஒரு டப்பாங்குத்து அடி. YUVAN IS BACK என்று சொல்லத் தோன்றியது.
பலரைக் கூப்பிட்டு இந்தப் பாடலைப் பகிர்ந்துகொண்டபோது பலருக்கும் இந்தப் பாடல் இருப்பதே தெரியவில்லை. எல்லாரும் 'நெட்ல இல்லியே' என்கிறார்கள். அப்புறம்தான் பார்த்தேன் நெட்டில் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட உரலில் மட்டும்தான் கிடைக்கிறது என்றார் நண்பர் கார்க்கி.
ஒரிஜினல் கேஸட் வாங்குங்கப்பூ.. சூப்பர் பாட்டு மிஸ் பண்ணாதீங்க!
**********************
சங்கமம்ல ஏதோ போட்டியாம். பூந்து விளையாடணும்னு தோணுது. நானும் களத்துல இறங்கறேன். தலைப்பு கல்லூரியாம். கதை, கவிதை, கட்டுரை, அனுபவம், புகைப்படம், குறும்படம் எல்லாம் அனுப்பலாமாம். இதோ லிங்க்.
ஸ்டார்ட் மீஜிக்....
Labels: Aviyal , அனுபவம் , அவியல் , நிகழ்வுகள்
அவியல் – 25.02.2009
கோவை, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டேன். வருடா வருடம் அங்கு செல்வது வழக்கம். இந்தமுறை இயற்கை சூழ்ந்த அந்த மலையடிவாரத்தில் அத்தனை வாகனங்கள் போக்குவரத்தாலும், கூட்டத்தினாலும், சத்தங்களினாலும் என்ன நிகழும் என்ற பார்வையோடு கலந்து கொள்ளுங்கள் என்றார் அண்ணாச்சி (வடகரை வேலன்). அது பற்றித் தனியே.. அப்புறமாய்..
ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது. அத்தனை கூட்டத்தை சமாளிக்க பல வழிகள் செய்யப்பட்டிருந்தாலும் நிறைய குறைபாடுகள். எனக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் மட்டும்..
ஆறுமணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிக்கு மூன்று மணிக்கே சென்று சேர்ந்தோம். நானும் நண்பர் ஒருவரும் நின்று பழரசம் அருந்திக் கொண்டிருந்த போது, பத்தடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டிருந்த நீலநிற ட்ரம் ஒன்றில் ஒருவர் A4 சைஸிலான பாதாம்பால் விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டிருந்தார். அந்த ஸ்டிக்கரின் ஒட்டும் பகுதியில் இருக்கும் பேப்பரைக் கிழித்துக் கீழே போட்டுவிட்டு, ட்ரம்மில் அதை ஒட்டுவார். இப்படியே நாலைந்து ட்ரம்களில் அவ்ர் ஒட்டியபோது அவர் அருகில் சென்று அந்த ட்ரம்மைப் பார்த்தேன். குப்பை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ட்ரம்!
“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்றீங்க.. தப்பில்ல. ஆனா அது எதுக்கு வெச்சிருக்கோ, அதுக்கு யூஸ் பண்ண மாட்டீங்கறீங்களே? அந்த ஸ்டிக்கரைப் பிரிக்கற பேப்பரை கீழ குப்பையா போடறீங்களே? அதையாவது இதுக்குள்ளயே போடலாம்ல?”
உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம்களுக்கு அருகில் கிடந்ததையும் எடுத்து உள்ளே போட்டார். சொல்வதை உணர்ந்து இப்படி ஏற்றுக் கொள்ளும் ஆட்கள் இருக்கும் வரை நம்பிக்கை காய்ந்துவிடாமல் இருக்கிறது.
****************
இன்னொன்று....
அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். அது எங்களுக்கு வேண்டும் என்றார்கள். ‘அப்போ நான் வேற யாருக்காவது வாங்கிட்டு போறேன்னா அவங்களுக்கு விலை எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். (பல புத்தகங்களில் என்ன விலை என்பது அச்சடிக்கப்பட்டு இருக்காது!) அப்படி உங்களை நம்பாதவங்களுக்காக நீங்க ஏன் வாங்கீட்டுப் போறீங்க?’ என்று கேட்டார் அந்தப் பெண். கேட்டதோடு மட்டுமில்லாமல் ‘புக்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார் கடையில் விற்பனையில் இருந்தவரிடம். இவர் அங்கே வாலண்டியராம். ‘நீங்க ஈஷா க்ளாஸ் முடிச்சு வாலண்டியரா இருக்கறது வேஸ்ட்டுங்க. இப்படி ஒரு பதிலை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கல. நீங்க வியாபாரம்னு ஆரம்பிச்சு கடை விரிச்சுட்டீங்க. நான் உங்களுக்கு டிவோட்டீயோ, ஃபாலோயரோ இல்ல. வெறும் கஸ்டமர்தான். என்னைத் திருப்திப் படுத்தறது உங்க கடமை’ என்று திட்டிவிட்டு நகர்ந்தேன். ச்சே!
*******************
இங்கே நான் இருக்கும் பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் ஒரு சின்ன போஸ்டர் அங்கங்கே தென்படுகிறது. ராஜபக்ஷேவின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாயாம். தீர்வு என்னவென்பதை தீர யோசிக்காமல் இந்த மாதிரி கோமாளித்தனமான வேலைகளை இந்த மாதிரி ஒருசிலர் செய்வதைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. இதேபோல தர்மபுரியில் ‘ஒகேனக்கல் 2025’ என்ற அமைப்பை நடத்தும் சிலர் தர்மபுரியை வல்லரசு மாவட்டமாக 2025க்குள் மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார்களாம். முதல்கட்டமாக நயன்தாரா நடிக்கும் தியேட்டர்களிலெல்லாம் நல்ல பாம்புகளை விடப் போகிறார்களாம். அவர் கவர்ச்சியாக நடிக்கிறார், கலாச்சாரத்தைக் கெடுக்கிறார் என்பதால் இப்படியாம். அடுத்தகட்டமாக நமீதா, அசின், ப்ரியாமணி, தமனா என்று லிஸ்ட் இருக்கிறதாம். இவர்களுடன் ஜோடி சேர்ந்து ஆடும் விஜய், அஜீத் உட்பட எல்லாருக்கும் இதே எச்சரிக்கைதானாம். அப்படியும் அடங்கவில்லை என்றால் அவர்கள் வீடுகளில் நல்லபாம்பை விடுவார்களாம்.
வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது..
“போங்கடா.. போய்ப் புள்ளகுட்டியப் படிக்க வைங்கடா.. கப்பித்தனமாப் பேசிகிட்டு....”
**********************
வர வர தொலைக்காட்சியைத் திறந்தால் திகட்டுகிற அளவுக்கு சேனல்கள். ஒவ்வொரு சேனலும் ஒரே மாதிரி, செய்திகள், காமெடி, படங்கள் என்று தங்களுக்குள் பல சேனல்களைக் காட்டி வெறுக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வடிவேலுவுக்கு தான் நடித்த காட்சி ஒவ்வொருமுறை ஒளிபரப்பப்படும்போதும் ஏதாவது தொகை சென்று சேருமானால் அவர் இந்நேரம் உலக நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இருப்பார். அவ்வப்போது மனதைத் தளர்த்திக் கொள்ள பார்த்த வடிவேலுவின் நகைச்சுவைகளைப் பார்த்தாலே திகட்டுகிற அளவுக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். அவருக்கும், சினிமாவிற்கும் இது நிச்சயமாக நல்லதல்ல. எல்லாரும் ஒருவித வெறுப்புதட்டிய மனோநிலையில் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.
***********************
பிப்ரவரி 15ம்தேதி மகளை ஹிந்தித் தேர்வு ஒன்றில் விட்டுவிட்டு வரும்போது ஒருபக்கம் நல்ல கூட்டம். ‘எப்படீங்க இப்படிப் பண்ணலாம்? அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கே இப்படிப் பண்ணலாமா?’ என்றெல்லாம் பேச்சுகள்!
விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.
ங்கொய்யால!
***********************
பாக்கிசில்லறைக்குப் பதில்
சாக்லெட் கொடுக்கிறான்
சர்க்கரை நோயாளிக்கு
இந்தக் கவிதைக்ககானப் பாராட்டுக்களை பின்னூட்டத்திலும் திட்டுக்களை தனியே மெயிலிலும் சொல்லுங்கப்பா. (மெய்ல் பாக்ஸ் இன்னைக்கு ஃபுல் ஆகப்போகுது!)
மனசாட்சி: இந்தக் கவிதைக்காக திட்டு வாங்க மாட்ட.. இதை கவிதைன்னியே அதுக்குத்தாண்டா ஒனக்கு திட்டுவிழப்போகுது!)
*
Labels: Isha Yoga , அனுபவம் , ஈஷா , நிகழ்வுகள்
அவியல் – 13.02.2009
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..
“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”
“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.
ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..
இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”
பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!
************************
கரண்டைக் கட் பண்றது யாருன்னு நமக்கெல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். கரண்டைக் கண்டுபிடிச்சது யாரு?
தாமஸ் ஆல்வா எடிசன்?
இல்ல! கரண்டைக் கண்டுபிடிச்சது பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அவரு மழை பெய்யும்போது பட்டம் விட்டிருக்காரு. மழை நின்னிருக்கு. அப்போ மழை பெய்யறப்போ மாஞ்சாக்கயிறிலேர்ந்து ஒரு வைப்ரேஷன் மாதிரி வந்ததை உணர்ந்து, அப்படிக் கண்டுபிடிச்சதுதான் மின்சாரம். ஆனா அதைப் பயன்படுத்தற விதமா பயன்படுத்தணும்டா-ன்னு பல்பைக் கண்டுபிடிச்சதால தாமஸ் ஆல்வா எடிசன் அதிகமா பேசப்படறாரு!
****************************
பாரிஸில் ஒரு பிரபல ஓவியரின் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ஆதாம் ஏவாள் குறித்த ஒரு நிர்வாண ஓவியம். அந்த ஓவியம் முன் நான்கைந்து குழந்தைகள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகி ஒருவர் ‘இதேதடா.. வில்லங்கமான படம் முன் குழந்தைகள் இருக்கிறார்களே’ என்று அருகே போக, ஒரு சிறுமி அருகிலிருந்த சிறுவனைப் பார்த்துக் கேட்ட்து காதில் விழுந்தது.
“டே.. இதுல எது ஆம்பள.. எது பொம்பள?”
அட்டா.. வில்லங்கமான கேள்வி கேட்டுவிட்டாளே’ என்று இவர் இன்னும் அருகே சென்றபோது அவன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...
“எப்படித் தெரியும்? அவங்கதான் ட்ரெஸ்ஸே போடலியே!”
குழந்தைகள்!
ஹூம்! நாம் தான் ‘பெரியவர்கள்’ ஆகிவிட்டோம்!!
*********************
உமா கேட்ட ஒரு கேள்வி அர்த்தமுள்ளதாக இருந்தது..
“இந்த சன் டி.விக்காரங்க சினிமா கே.டி-வில போடுவாங்க... பாட்டு சன் மியூசிக்ல போடுவாங்க. நியூஸ் சன் நியூஸ்ல போடுவாங்க. குழந்தைகள் ப்ரோக்ராம் சுட்டில போடுவாங்க. இப்போ காமெடிக்குன்னு ஆதித்யா-ன்னு ஆரம்பிச்சுட்டாங்க”
“சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை?”
“அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க? வெறும் சீரியலேவா?”
இது சீரியல் கொஸ்டின் இல்ல.. சீரியஸ் கொஸ்டின்தான்!
************************
நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே.. அதுல ‘Don’t change the day/date between 10 pm and 2 am in your day/date watch’ன்னு போட்டிருந்தது. ஏன் இப்படி-ன்னு யோசிக்க கொஞ்சம் மண்டையைப் போட்டு குழம்பிக் கண்டுபிடிச்சேன்.. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்!
****************
திருவனந்தபுரம் ஹைகோர்ட்டில் ஒரு பெரிய ஓவியம் வைத்திருக்கிறார்களாம். இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம். ஒருத்தரிடம் மட்டும் கூடுதலாக பேப்பர் கட்டு ஒன்று இருக்குமாம்.
அனுசரித்துப் போங்கள். வழக்கு நடத்த ஆரம்பித்தால் சட்டிதான் மிஞ்சும் என்பதே அதன் பொருளாம். அப்போ அந்த பேப்பர் கட்டு?
ஜெயிச்சவனுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா அந்த தீர்ப்பு நகல் இருக்குமாம். சபாஷ்!
********************
முரளிகண்ணன்( வரவேற்பறை), செல்வேந்திரன் (கவிதைகள்) என்று விகடனில் கலக்க, கார்க்கி, கேபிள் சங்கர், தாமிரா யூத் ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இடம்பெற என்று எல்லாருக்கும் வாழ்த்துகள் சொல்வதை விட முக்கியமாய் விகடனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இப்படி எங்களை ஊக்குவிப்பதற்கு. (ஏற்கனவே யூத்து, யூத்து-ம்பாரு சங்கர். இனி கேட்கவே வேண்டாம்!)
********************
கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்ற கடிதத்தொகுப்பை சோர்வுறும்போதெல்லாம் எடுத்துப் படிப்பது வழக்கம். இதை நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது “அவரு அவர் நண்பர்களுக்கு எழுதின கடிதத்தைப் படிச்சா உங்களுக்கு எப்படி ரி-ஃப்ரெஷ் ஆகும்?”ன்னு கேட்டார்.
அவருக்கு பதிலாய் இதோ அந்தப் புத்தகத்தில் அங்கங்கே நான் அடிக்கோடிட்டவையில் சில..
* வேலைக்குப் போக ஆரம்பித்தபிறகு வேலைதான் எப்போதுமே வாழ்க்கையாகிவிடுகிறது
* வாழ்க்கை எப்போதுமே ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை.
* தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.
* எதையாவது தொடர்ந்தும், எதனாலோ தொடரப்பட்டும் கடைசிவரை செய்வினை, செயப்பாட்டுவினை ஆகிவிட்டது வாழ்க்கை.
* மூக்குத்தி இல்லாமலும் அழகாக இருக்கிற மூக்கு உலகத்தில் எவ்வளவு இருக்கிறது.
* தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்.
*****************
Labels: அனுபவம் , நிகழ்வுகள்
அவியல் 05.02.09
திருப்பூரில் புத்தகக் கண்காட்சி என்றால் என் மனைவிக்கு அவ்வளவு பயம். ஏற்கனவே ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு பலமுறை பர்ஸை சோதனை செய்துவிட்டு அனுப்பியும், க்ரெடிட் கார்டு மூலம் செலவழித்துவிட்டு வந்ததில் அவருக்கு ஏமாற்றம். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருப்பதால் நானும் வாங்கும் மனநிலையில் இல்லை.
நண்பர் செல்வேந்திரனுடன் ஞாயிறன்று திரு.ஞானசம்பந்தனின் உரை கேட்கச் சென்றிருந்தோம். ஏதோ கட்சி மீட்டிங்கிற்குப் போனது போல எல்லாருமே அரசியல்வாதிகளாக இருந்தார்கள். ‘முடிஞ்சா ஒக்கார்ந்து கேளுடா’ என்பது போல பேசினார்கள். செல்வேந்திரன் ‘இதுபோன்ற இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பேச வேண்டிய விஷயங்களை எழுதிக் கொடுக்கும் பணியை ஆரம்பிக்கலாம் போல இருக்கிறதே’ என்று சொன்னார். வந்தவர்கள் எல்லாம் அழைப்பிதழை வைத்துக்கொண்டு ‘................ அவர்களே, .................... அவர்களே’ என்றது மகா அறுவை. ரொம்பக் கீழே போய், திருவள்ளுவர் அவர்களே, பாரதியார் அவர்களே என்று சொல்லாமல் விட்டது தேவலை.
எட்டாம் தேதிவரை நடைபெற இருக்கிறது இந்தப் புத்தகக் கண்காட்சி. கண்காட்சியின் பொருட்டு திருப்பூருக்கு வர விழையும் வலைப்பதிவு நண்பர்கள் ஒரு மெயிலில் தெரிவித்தால் நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.
*****************************************
கல்கத்தாவின் தெருவோரத்தில் கிடக்கிறார் அந்தப் பெரியவர். உடம்பில் அங்கங்கே புண்களுடம் ரத்தம் வழிய கிடந்தவரை நாள்முழுக்கக் கடந்துசென்ற எவரும் கண்டுகொள்ளாதபோது, அந்தக் கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய அந்த மூதாட்டி, பெரியவரைக் கைத்தாங்கலாக காரில் ஏற்றி தான் சார்ந்த மருத்துவமனையில் சேர்க்கிறார். ஓரிரு நாளில் குணமாகிக் கண்விழிக்கிறார் பெரியவர். சிலுவை அணிந்த அந்த மூதாட்டி அன்னை தெரசா என்பதில் சஸ்பென்ஸ் தேவையில்லை. பெரியவரைப் பார்த்து அன்னை தெரசா யாரென்று கேட்க, பெரியவர் சொல்கிறார். “நான் காளிகோயில் பூசாரி அம்மா. இத்தனை வருடங்களாகப் பூஜை செய்கிறேன். காளி உங்கள் வடிவில் காட்சி தந்துவிட்டாளம்மா” என்கிறார்.
‘மதமெனும் பேய் பிடியாதிருக்க..’ என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சியில் செவ்வாயன்று திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போது இதுபோன்ற நிறைய சம்பவங்களைச் சொல்லி, முடிவில் “கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது” என்றார். இலக்கியக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதிகளுக்கிடையில் இவர் ஒரு விதிவிலக்கு. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக கூட்டத்தைக் கட்டிப் போட்டார். பேசிமுடித்து மேடையிலிருந்து இறங்கி காருக்குச் செல்லும் வரை அவரோடு பேசியது ஒரு நல்ல அனுபவம்.
*******************************************
இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.
தோனியின் வீரர்கள் இப்படிப் பாடுபட்டு வெற்றிபெற, ‘மகேந்திரசிங் தோனியா, மச்சக்கார தோனியா’ என்றும், LADY LUCK IS WITH DHONI என்றும் அவரது உழைப்பை அதிர்ஷ்டத்தோடு சம்பந்தப்படுத்துவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.
*********************************************
மகள்கள் ஏதோ எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்கும்போது என்னையும் செய்யச்சொல்ல, சும்மா ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று இருவரும் ‘அப்படி இல்லப்பா.. இப்படி’ என்று என்னை அமுக்க, முதுகில் பயங்கரமான சுளுக்கு. நேற்று முழுவதும் வலி. சும்மாவே படுத்துக் கிடந்து, நேற்று மாலை பொறுக்க முடியாமல் டாக்டரிடம் போக அவர் ஏதோ சால்டரிங் கம்பிபோல ஒன்றால் ஷாக் குடுத்து, மாத்திரை தைலம் கொடுத்தார். ம்ஹூம். உமாவின் நண்பி ஒருவரது அப்பா சுளுக்கெடுப்பார் என்று கேள்விப்பட்டுப் போனோம். ‘எங்கே வலி’ என்று கேட்டார். வலது முதுகு என்று சட்டையைக் கழட்டப் போக, ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று இடது கையைப் பிடித்து, முழங்கைக்கு அருகில் எண்ணையைப் போட்டு சுளுக்கெடுத்தார். ‘முதுகுல பிடிப்பு. இங்க வழிக்கிறாரே’ என்று கேட்டபோது, ‘மாறுகால் மாறுகைலதான் சுளுக்கெடுக்கணும். நிஜமா சுளுக்கா இருந்தா இதுல சரியாய்டும். இல்லீன்னா எக்ஸ்-ரே எடுத்துத்தான் பார்க்கணும்’ என்றார். பிரமிப்பாய் இருந்தது. ஓரளவு சரியாகி, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்.
*******************************************
சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது:
“நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”
**************************************
"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"
-நான் சொன்னது!
*
Labels: General , அனுபவம் , நிகழ்வுகள்
அவியல் - ஜனவரி 29 2009
தனிப்பாடல் திரட்டு என்றொரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அம்பிகாபதி, அருணாச்சலக் கவிராயர், கம்பர், அவ்வையார், காளமேகம் உட்பட 31 புலவர்களில் சில பாடல்கள் அடங்கிய புத்தகம். பல பாடல்கள் வியப்பாய் இருக்கின்றன. அழகிய சொக்கநாதக் கவிராயர் என்ற கவிஞர் ஒரு பெண்ணைக் காதல் கொண்ட தலைவன், அந்தப் பெண் பேசாமடந்தையாய் இருக்கும்போது பாடுவதாக எழுதிய ஒரு பாடலில் வரிகளில்…
வெள்ளரிக் காயா? விரும்பும்அவ ரைக்காயா?
உள்ளமிள காயா? ஒருபேச் சுரைக்காயா?
என்று காய்களையும் சேர்த்து கவி படைத்திருக்கிறார்!
வெள்ளரிக்காயா: வெள்ளரி = வெண்மை நிறமுடைய அரி (திருமால்) நரசிங்கமாய்த் தோன்றியபோது அவரது தாய் அவர் தோன்றிய தூண்தானே? அந்தக் காதலி தூணைப் போல நின்றுகொண்டிருந்தாளாம்!
விரும்புமவரைக் காயா: விரும்புவோரை இயல்பாகக் கோபம் கொள்ளுபவளா நீ? (காயா – கோபமா?)
இப்படி அர்த்தத்தோடு சேர்த்திப் படிக்கும்போது நன்றாகத் தான் இருக்கிறது.
இதே தொகுப்பில் ‘தாயோடு அறுசுவைபோம்’ என்ற பாடலில் பொற்றாலியோடு எவையும்போம் = பொன்தாலி அணிந்த மனைவி போனால் எல்லா நலனும் நீங்கிவிடும் என்றெழுதிய அவ்வையாரே... யார் யாரை எங்கெங்கே புகழ வேண்டும் என்றெழுதிய ‘நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்’ என்ற பாடலில் ‘மனையாளைப் பஞ்சணையில்’ என்றெழுதியது ஏனென்று புரியவில்லை. மனைவியைப் பஞ்சணை மெத்தையில் புகழவேண்டும் என்பதில் எனக்குடன்பாடில்லை.
மனைவிகளுக்கு அவர்கள் அழகைப் புகழ்வதில் மகிழ்ச்சியுண்டு எனினும், அது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும். மனைவிமார்களுக்கு அவர்கள் சமையலைப் புகழ்கையில் அதே அளவு மகிழ்விருப்பதைக் கண்டிருக்கிறேன்/கேட்டிருக்கிறேன்.
************************
இதேபோல பாடல்களில் புரியாத வரி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது... ‘சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே’ பாடலில் வரும் ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ எனும் வரி. இதற்கு நல்லதொரு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளாக இதன் அர்த்தம் அறிய ஆவல். மழைத்துளி கன்னிமையை எப்படிக் கண்டறியும்? ஏதோ ஒரு குறும்பான அர்த்தத்தில்தான் கவிஞர் இதை எழுதியிருப்பார். அதை அறிய ஆசையாய் இருக்கிறது! வைரமுத்துவை நேரில் கண்டால் கேட்க விரும்பும் கேள்விகளில் இது ஒன்று. தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்!
***************************
ஊட்டி சுற்றுலா போகுமுன் கோவை ஹோட்டல் ஒன்றில் காலை டிஃபனுக்காகப் போனோம். மசால்தோசை ஆர்டர் செய்த அண்ணாச்சி (வடகரை வேலன்) சர்வரிடம் சொன்னார்:
“வேகமா கொண்டுவாங்க. கால் மாத்திடாதீங்க”
எனக்குக் குழப்பமாக இருந்தது. கால் மாத்திடாதீங்கன்னா? அண்ணாச்சியிடமே கேட்டேன்...
“வேகமா-ல கால் மாத்திப் போட்டுப் பாருங்க”
வேகாம.
ஹோட்டல் என்பதால் அவர் காலில் விழ முடியவில்லை!
***************************
நண்பர் எம்.எம்.அப்துல்லா எல்லாரையும் ‘அண்ணே’ என்றழைப்பது நாடறிந்த விஷயம். நான் ரமேஷ் வைத்யா அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அப்துல்லாவுக்கு கான்ஃபரன்ஸ் கால் போடச் சொன்னார். போட்டபோது, இவர் கேட்டார்:
“அப்துல்லா.. உங்களுக்குக் கூப்பிட்டபோது உங்க அண்ணன்னு யாரோ பேசினாங்க நேத்து. ஆனா அது உங்க குரல் மாதிரிதான் இருந்தது. யார் அது?”
நான் இடைமறித்துச் சொன்னேன்...
“இவராத்தான் இருக்கும். பழக்கதோஷத்துல தன்னையே அண்ணன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு!”
எல்லாரும் கைதட்டீங்களா? வெரிகுட்!!
********************
திருப்பூரில் ஒரு வீட்டிற்கு திருடன் வந்திருந்து, திருட முயன்றிருக்கிறான். பலமணிநேரத் தேடலில் ஒன்றும் சிக்கவில்லை. கடுப்பாகிப் போன அவன் வீடு முழுவதும் மலஜலம் கழித்து, பான்பராக் கறைகளாலும் அசிங்கப் படுத்திவிட்டுப் போய்விட்டானாம்.
இதைத் தினசரியில் போட்டிருந்தார்கள். சரி. முடிக்கும்போது ஒரு வரி...
“வீட்டுக்காரரின் சமயோசிதத்தால் 40000 ரூபாய் தப்பியது. அவர் குப்பைக் கூடைக்குள்ளும், அரிசிப் பானையிலும் பணத்தை ஒளித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது”
தேவையா இது?
***************************
காதலில் விழுந்தேன் படம் பற்றி ஆஃபீஸில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“படமாங்க அது. ச்சே. செத்துப்போன காதலியோட பாடியை வெச்சுட்டு சுத்தறானாம் ஹீரோ” என்றொருவர் சொல்ல நான் கேட்டேன்.
“ச்சீ! பாடியை வெச்சுட்டா? அசிங்கம். அசிங்கம்” ன்னேன்.
ஒரு நிமிஷம் யாருக்கும் ஒண்ணும் புரியல. புரியறதுக்குள்ள நான் அங்கிருந்து சிரிச்சுட்டே வெளிய வந்துட்டேன்!
*********************
போன வார ஜீ.வி-யில் பார்த்திபனின் டைமிங்கூ நல்லா இருந்தது.
‘எது நடந்ததோ
அது ஏழாயிரமாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது ‘சத்திய’மாகவே நடக்கிறது
எது நடக்குமோ
அது ஜாமீனாகவே நடக்கும்!'
'இடையிடையே
தேர்தல் போதும்
தமிழக கிராமங்கள்
தன்னிறைவடைய...'
இப்படி நாலைந்து.
எனக்குப் பிடித்த காசி ஆனந்தனின் ஒரு நறுக்கு
ஏடுகளில் முன்பக்கம்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கம்
அடுக்களையில்
தலைப்பு: பெண்கள்.
.
Labels: அனுபவம் , நிகழ்வுகள்
அவியல் – ஜனவரி 19 ‘2009
பொங்கல் விடுமுறையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மீட் பண்ணிவிட்டு வரலாம் என்று திடீர் முடிவாகி, போய்விட்டு வந்தோம். நல்ல கூட்டம். நல்ல தரிசனம். அங்கிருந்து சமயபுரம் மாரியம்மனையும் தரிசித்து வந்தோம். கோயிலைப்பற்றியும் பயண அனுபவம் பற்றியும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு, இரண்டே இரண்டு சம்பவங்கள்..
கோயிலின் க்யூவில் நிற்கும்போது மூன்று அல்லது நான்கு வயதுள்ள ஒரு குழந்தையிடம் அப்பா கேட்டார்.
“நீ என்ன பாப்பா வேண்டிக்கப்போற?”
அவள் கன்னத்தில் கைவைத்து யோசித்தவாறே, “என்ன வேண்டிக்கறது?” என்று திருப்பிக் கேட்டாள்.
“அப்பா கொஞ்சம் ஒல்லியாகணும். நீ கொஞ்சம் குண்டாகணும்ன்னு வேண்டிக்க” என்றார் அவர்.
இவள் சரி என்று கம்பிமேல் ஏறி விளையாடி விட்டு, ஐந்து நிமிட இடைவெளியில் கேட்டாள்..
“அப்படி ஆய்ட்டோம்னா அடுத்த தடவை வரும்போது அப்படியே மாத்தி வேண்டிக்கணுமா?”
சுற்றி இருந்தவர்களெல்லாம் பிரமித்துப் போக, அவள் அப்பாவின் கண்களில் பெருமிதம்!
**************
கோயிலை ஒட்டிய பெட்டிக் கடை ஒன்றில் அறிவிப்பு.
எச்சரிக்கை 1: இன்று துக்ளக் வரவில்லை.
எச்சரிக்கை 2: நாளை வரலாம்.
துக்ளக் பாணியிலேயான இந்த அறிவிப்பை வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு எழுதிய கடைக்காரருக்கு கைகொடுத்துப் பாராட்டியபோது ‘ஒவ்வொரு தடவையும் இப்படித்தாங்க எழுதுவேன்” என்றார் அவர்.
பின்ன? சுஜாதா ஊர்ல இருந்துகிட்டு இந்தக் க்ரியேடிவிட்டிகூட இல்லைன்னா எப்படி!
**************
யானைகளுக்கு காசும், தேங்காயும் கொடுத்தால் பாகனிடம் கொடுத்துவிடுகிறது. பழம் கொடுத்தால் 'லபக்’கென்று வாயில் போட்டுக் கொள்கிறது. எப்படிப் பழக்கியிருக்கிறார்கள் என்று வியந்து கொண்டிருக்கும்போதே பாகன் அடுத்து நின்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்..
“ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா காயினாக் குடுங்க. ஒரு ரூபா காயினைப் பாத்தா கோவப்படும்”
அடுத்த நிமிடம் ஐந்தாறு பேர் கொத்தாக எஸ்கேப்பானார்கள்.
நல்லாக் கெளப்புறாய்ங்கய்யா பீதிய!
**************
குமுதம் டாப் டென் ப்ளாக்கரில் ஆறாவதாக அடியேனை தேர்வு செய்திருந்தார்கள். நன்றி குமுதத்துக்கும் உங்களுக்கும். கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. கம்பனை எழுதினாலும், காளை பிடி பற்றி எழுதினாலும் மிரட்டும் நர்சிம், எப்போதாவது புனைவு எழுதினாலும் அபார நடையில் தரமாக எழுதும் முரளிகண்ணன் என்று சிலரின் எழுத்துக்கள் ‘டேய்... ஜாக்கிரதை’ என்று பயமுறுத்துகின்றது. தாமிரா, கார்க்கி போன்றவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பல பாராட்டுகள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
இந்த நேரத்தில் நான் எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்லாயிருப்பதை நல்லாயிருக்கு என்றும், ‘புகழ்தலின் வைதலே நன்று’ என்று நாலடியார் சொன்னது போல, கேவலமாக இருப்பதை ‘இதுக்கு நீங்க இன்னைக்கு லீவு விட்டிருக்கலாம்’ என்றும் இடித்துரைக்கும் அவர்கள் இல்லாவிட்டால் நான் சீரழிந்திருப்பேன்.
*************
திருமங்கலம் இடைத்தேர்தலில் பணம் விளையாடியதாகப் பரவலான பேச்சு இருக்கிறது. இங்கே எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் ‘சார்.. அஞ்சாயிரம் தர்றேங்கறாரு சார். எங்க வீட்டு ஓனர். எங்க வீட்ல நானும் என் வொய்ஃபும் போனா பத்தாயிரம் சார்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். ‘லீவு தரமாட்டாங்களே’ என்று கேட்டதற்கு ‘சார்.. ரெண்டு மாச சம்பளம் ஒரே நாள்ல கெடைக்குது சார். லாஸ் ஆஃப் பே-ன்னாலும் பரவால்ல.. போகணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
எனக்குள் இருந்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிச கிருஷ்ணகுமார், அவர் வீட்டு ஓனரைப் பார்த்து இதெல்லாம் நிஜம்தானா என்று விளக்கமாய்க் கேட்கச் சொல்லிக் கொண்டே இருந்தான். சரி என்று அவரிடம் பேசியதற்கு அடுத்த நாள் அவரது வீட்டுக்குப் போனேன்.
பயில்வான் ரங்கநாதனுக்கு அண்ணன் போல பெரிய மீசையோடு ஒருத்தர் கதவு திறந்து தடித்த குரலில் ‘என்ன வேணும்’ என்று கேட்க ‘இது பதினஞ்சாம் நம்பர் வீடுதானே’ என்று கேட்டு ஓடி வந்துவிட்டேன்!
****************
இளையராஜாவின் இசையில் ‘நான் கடவுள்’ பாடல்கள்தான் இப்போதைய என் ஃபேவரைட். (இன்னும் நந்தலாலா கேட்கவில்லை) மாதா உன் கோயிலில் பாட்டை, மெட்டெல்லாம் மாற்றாமல் அழகாக ரீ-மிக்ஸில் தந்திருக்கிறார். அது எப்படி இவர் இசையில் ஒலிக்கும் தபேலா மட்டும் அப்படிப் பேசுகிறதோ! அந்தப் பாடலின் புதிய வெர்ஷனான 'அம்மா உன் பிள்ளை நான்' பாட்டில் எந்த இடத்தில் ராஜா BEATஐ ஆரம்பிக்கிறார் என்பதை முதல்முறையிலேயே ஊகிக்க முடிந்தால் நீங்கள் க்ரேட்!
பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடல் ஏற்கனவே ராஜாவின் ரமண மாலை-யில் இளையராஜாவின் குரலிலேயே கேட்ட பாடல். அற்புதமான பாடல். ராஜாவின் அருமையான வரிகள். இதில் கே.ஜே.யேசுதாஸ்... ச்சே... மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் எனக்கு இரண்டு கேள்விகள்...
ரமணமாலையில் தான் பாடும்போது பிட்ஷைப் (BITSHAI) பாத்திரம் என்று பாடியவர் மது பாலகிருஷ்ணனை பிச்சைப் (PICCHAI) பாத்திரம் என்று பாடவிட்டது ஏன்?
சரணத்தில்
அம்மையும் அப்பனும் தந்ததால் – இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
என்பதில் ஒவ்வொரு வரிகளின் முடியும் ‘ல்’ மது பாலகிருஷ்ணன் பாடும்போது சரியாகக் கேட்கவே இல்லை. அதுவும் ஆதியின் வல்வினை சூழ்ந்ததால் என்பது சூழ்ந்ததா என்றுதான் முடிக்கிறார். ராஜா பாடும்போது அழுத்தமாக அந்த ‘ல்’ல்லை பாடியிருப்பார்.
இதிலென்ன பெரிய தவறு என்று தோன்றுகிறதா? இம்மையை நான் அறியாததால் என்பதில் அடக்கமும், இம்மையை நான் அறியாததா என்பதில் இறுமாப்பும் தெரிகிறதே!!!
நிச்சயமாக ராஜா இதைக் கண்டுக்காமல் விட்டிருக்க மாட்டார். முதலாவது பிட்ஷை, பிச்சையானது எல்லோருக்கும் புரியட்டும் என்பதால் இருக்கலாம். இரண்டாவது... என் சிற்றறிவிற்கு எட்டவில்லை!
ஆனால் திரும்பத்திரும்ப கேட்க வைக்கிற பாடல்.
Labels: அனுபவம் , நிகழ்வுகள்
ஸ்பெஷல் அவியல் – 31 DEC 2008
அந்தப் பிரபலம் தனது நண்பரை பிரபல இயக்குனர்கள், எழுத்தாளர்களெல்லாம் கலந்து கொள்ளும் ஒரு விழாவுக்கு அழைக்கிறார். நண்பருக்கு வர முடியாத சூழல். மறுக்கிறார். பிரபலம் வற்புறுத்துகிறார்.
நண்பர் தயக்கமாய் “வாழ்க்கைல இந்த சான்ஸ் கிடைக்காதுதான்..” என்றதும் சட்டெனச் சொல்கிறார் பிரபலம்
“இந்த சான்ஸ்னால வாழ்க்கையே கிடைக்கலாம் இல்லியா?”
யார் அந்தப் பிரபலம்? அது என்ன விழா?
----------------------
பென்சனர் கணனி, பன்மலர், ஜெயமாலா, கவிதா மண்டலம், இன்றைய கல்வி, செய்திமடல், தமிழாலயம், கவிதை உறவு, உதவிக்கரம், ஆட்டோக்காரர், தில்லை சுடர், குடிமக்கள் முரசு, வானமே எல்லை, தொழில் நுட்பத் தோட்டக்கலை, தமிழ்ப்பணி, இமயகீதம், தமிழ் மூவேந்தர் முரசு, கண்ணியம், இலக்கியப்பீடம், கனிமொழி, தமிழ்நானூறு, வளரும் தமிழ் உலகம், அமுதம், ஆளுமைச் சிற்பி, இளந்தமிழன், முகம்
இதெல்லாம் என்ன?
ஆனந்தவிகடன், குமுதம் மாதிரியான வார, மாத, மாதமிருமுறை இதழ்கள்!
எந்த நூலகத்திற்குப் போனாலும் இவற்றைப் பார்க்கலாம். இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா இவற்றை? (வேலன் அண்ணாச்சி – இந்தக் கேள்வி உங்களுக்கு இல்லை!)படித்தால் பிரபல பத்திரிகைகளை விட நல்முத்துக்கள் இதில் சிக்குவதுண்டு!
******************************
விகடன் அலுவலகத்தில் வலைப்பூ படிக்கிறார்கள் என்பது எல்லாரும் அறிந்ததே. வால்பையன் அதை உறுதிப்படுத்தி இருந்தார். மானாட மயிலாட டீமிலும் BLOG படிக்கிறார்களோ? ஏன் கேக்கறேன்னா... நான் ஒருமுறை அவியலில் இவ்வளவு சூப்பராக செட் போடும் கலைஞர்களை அறிமுகப்படுத்தினால் என்ன என்று எழுதியிருந்தேன். அது MM 1, அல்லது MM 2 என்று நினைக்கிறேன். ஞாயிறு ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் செட்டில் படம் வரைந்திருந்த ஓவியக் கலைஞர் சின்னத்தம்பியை அறிமுகப்படுத்தினார்கள்!
ரொம்ப ஓவரா சிந்திக்கறேனோ?
**************************
பெண்கள் ரோஜாப்பூவை தலையில் வைக்கும்போது தலைகீழாக வைத்திருந்தால் எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. என்னமோ, ‘உன் தலைல வந்து ஒக்கார வேண்டியதாப் போச்சே’ என்று அந்தப் பூ தலைகுனிந்திருப்பதாய் எனக்குத் தோன்றும். ஒரு சிலரே பூவை மேல் நோக்கிய வண்ணம் வைக்கிறார்கள். ஏன் இப்படி?
***************************
சிம்பு ஒரு நல்ல திறமைசாலிதான். ஆனால் டான்ஸ் ஆடச் சொன்னால் ஜிம்னாஸ்டிக் செய்வதுதான் ஏனென்று தெரியவில்லை. போதாத குறைக்கு அவரது அப்பாவின் காமெடி பேட்டிகளும் சேர்த்து அவரை காணாமல் போக்கிவிடுமோ என்று தோன்றுகிறது. எப்போ பார்த்தாலும் ‘இன்னிக்கும் நான் ஹீரோவா நடிச்சா கைதட்டி ரசிக்க கூட்டம் கூட்டமா வருவானுக சார்’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு பேட்டி தருகிறார். போதாக் குறைக்கு ‘ரஜினி, கமலை எல்லாம் ஏத்துக்கறீங்க? நான் அவங்களை விட வயசுல சின்னவன் சார்’ என்கிறார்.
இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!
********************************************
ஒருத்தன் ஆஃபீஸுக்கு லீவு லெட்டர் எழுதினானாம்.. ‘நாளை நான் விஷம் குடித்து சாக இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு....’
ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?
இன்னொரு ஜோக்..
மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”
அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.
அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.
”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”
**********************************
முதல் பத்தியில் சொன்ன அந்தப் பிரபலம் நர்சிம். (இதையே எம்ஜியார், கவிஞர் வாலின்னு எதுனா போடலாம்!) அந்த விழா சாரு நிவேதிதாவின் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா. மதன், இயக்குனர்கள் அமீர், சசிகுமார் என்று பலர் கலந்து கொள்ளும் அந்த விழா முடிந்து ‘தேநீர் விருந்து' நடக்குதாம்... நம்ம நர்சிம்மின் ஏற்பாட்டில்!!மேலதிக விபரங்களுக்கு சாருவின் இந்தப் பதிவைப் பாருங்கள்.
நர்சிம்.... எனக்கு ஒரு செட்டு பார்சல்! (புக்ஸ்ங்க!)
**************************************
ஏற்கனவே என்னுடைய ஃபாலோயர் லிஸ்டில் ஸ்வாமி ஓம்கார் என்றொரு பதிவர் இருக்கிறார். போய்ப் பார்த்தால் வயது 108, இருப்பிடம் ‘ஈஸ்வரனின் மனதில் புருவ மத்தியில்’ என்று அவரது ப்ரொஃபைலில் போடப்பட்டிருந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். (பதிவுகள் நல்ல தரம்!) இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஃபாலோயர்.. பார்த்தால் சாணியடி சித்தராம். வயது 84. மூலிகைப்பண்ணை வைத்து நடத்தி வருகிறாராம். இருப்பது தென்பொதிகையாம்.
ம்ம்..நடத்துங்க..நடத்துங்க...
--------------------------
2008 எனக்கு ஒரு முக்கியமான வருடம். வலைப்பூ ஆரம்பித்தது, பல சொல்லிக் கொள்ளும்படியான நண்பர்களைப் பெற்றது என்று மறக்க முடியாத வருடம். என்னை உயிப்பாய் வைத்திருக்கும் எழுத்துக்கும், என் இனிய உங்களுக்கும் என்றென்றும் நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!
(இந்தப் புத்தாண்டில் எந்தச் சபதமும் ஏற்க மாட்டோம் என்ற சபதம் ஏற்போம்! ஓக்கே?)
---------------------------------------------------
தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
-கல்யாண்ஜி
அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து
-கல்யாண்ஜி
எத்தனையோ எழுதிவிட்டேன்
ஒரு முறையும் எழுத முடியவில்லை
உன் பெயரை.
எழுதப்போவது
உன் பெயரையென்று தெரிந்ததும்
தலை நிமிர்ந்து கொள்கிறது
என் பேனா..
எப்படி எழுத?
(கடைசி கவிதையை எழுதினது தபூ சங்கர் அல்ல.. பேரைச் சொன்னா திட்டுவீங்களோன்னு பயமா இருக்கு.... ஹி..ஹி..!)
Labels: General News , அனுபவம் , நிகழ்வுகள்
அவியல் - 15.12.08
மக்கள் தொலைக்காட்சியின் ‘புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சி தவறாமல் நான் பார்க்க நினைக்கும் ஒரு நிகழ்ச்சி. நாட்டு நடப்பை, வெகு ஜாலியான இரு நண்பர்களின் பேச்சில் எள்ளலும், எகத்தாளமுமாக பேசி ‘சரிதான்ல இவங்க சொல்றது’ என்று நினைக்க வைப்பதில் இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வார நிகழ்ச்சியில் பத்திரிகைகள் குறித்தும், பத்திரிகை தர்மம் குறித்தும் பேசினார்கள். அதில் கேட்ட இரண்டு நகைச்சுவைகள்..
பக்கிரிசாமி என்பவர் மரணமடைந்து விட்டார். ஒரு பத்திரிகையில் தவறாக குருசாமி காலமானார் என்று எழுதிவிட்டார்கள். குருசாமி கடுங்கோபத்தோடு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று நியாயம் கேட்கிறார். ‘மன்னிச்சுக்கோங்க.. நாளைக்கே மறுப்பு போட்டுடறோம். தப்பாப் போட்டதுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கறோம்’ என்கிறார்கள்.
அடுத்த நாள் மறுப்பு வெளிவருகிறது.. இப்படி..
“காலமானவர் பக்கிரிசாமி. குருசாமி என்று தவறாக அச்சாகி விட்டது. குருசாமி உயிருடன்தான் உள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”
இன்னொன்று..
ஒரு பத்திரிகையை இரு ஆசாமிகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..
கவுண்டமணி:
‘சேலத்தில் நகைக்கடை உடைத்து துணிகர கொள்ளை.. மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு’
பேப்பரைத் திருப்பி, “கோவையில் ஒடும் ரயிலில் லேப்டாப் திருடிய மர்ம ஆசாமியின் அடையாளங்கள் சிக்கின”
அடுத்த பக்கத்தைத் திருப்பி.. “மும்பையில் கைவரியை காட்டிய மர்ம ஆசாமியைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்தது”
செந்தில் குறுக்கிட்டு கேட்கறாரு.. “அது எப்படிண்ணே.. மர்ம ஆசாமிங்கற ஒரு ஆளு, ஒரே நாள்ல கோவை, மும்பை, சேலம்ன்னு போய் கைவரிசையைக் காட்டறான்?”
**********************
மலேசிய மந்திரி ஒருத்தரது பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் தான் தனது கனவுத் திட்டம் என்று சொல்லியிருந்தார். மலேசியா அரசுத் துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறார்களாம்.
'இங்கயும் இப்படி மாறினா நல்லாயிருக்கும்ல?; என்று இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தோம்.
"கஷ்டம். ஏன்னா லஞ்சம் நோட்டாத்தானே குடுக்க முடியும். அது பேப்பர்தானே? அப்புறம் எப்படி பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் சத்தியமாகும்?" என்று கேட்டார் ஒருவர்.
யோசிக்க வேண்டிய விஷயம்தான்! (நம்ம இல்ல, லஞ்சம் குடுக்க/வாங்கறவங்க!)
*********************************
சமீபத்தில் ஆக்ஸிடெண்டலாக ஒரு இன்சிடெண்டைப் பார்க்கநேர்ந்தது. அந்த இன்சிடெண்ட் ஒரு ஆக்ஸிடெண்ட்! சிறிய விபத்துதான். ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் தனது பைக்கால், மொபட்டில் வந்துகொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்கவர் மீது மோதிவிட்டார். இருவருமே சிதறி விழுந்துவிட்டனர். உடனேயே கூடிய கூட்டத்தில் அந்த இளைஞனுக்கு ஆதரவாய் சிலர் அந்தப் பெரியவரை அடிக்காத குறையாக திட்ட ஆரம்பிக்க, அந்தப் பெரியவருக்கு ஆதரவாய்ப் பேசிய சிலரோ, இளைஞனை அடித்தே விட்டனர்!
என் கேள்வி இதுதான். அந்த இளைஞன் மீது தவறில்லை என்று நினைத்தவர்கள் அந்த இளைஞனை உடனே தூக்கி முதலுதவி செய்ய, அந்தப் பெரியவருக்கு
ஆதரவாய் வந்த சிலர் அவரை எழுப்பி தேவையான உதவிகள் செய்ய என்று இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!
மனிதம் குறைந்துவிட்டதற்கு இது போன்ற சம்பவங்கள்தான் சாட்சியாய் நிற்கின்றன!
********************
நட்பில் ஆண்-ஆண் நட்பு, ஆண்-பெண் நட்பு, பெண்-பெண் நட்பு இந்த மூன்றில் எது மிக ஆழமானது? எப்படியும் இதில் ஆண்-பெண் நட்பு அடிபட்டுப் போகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பல ஆண்-பெண் நட்பு பிரிந்து போய்விடுகிறது. ஆணும் ஆணும் நட்பு சர்வசாதாரணமானதுதான். அடிக்கடி பேசிக் கொண்டேயிருப்போம்! ஆனால், நீங்கள் மணமானவராயிருந்தால் உங்கள் மனைவி அவரது நண்பிக்குப் பேசும்போது கவனித்துப் பாருங்கள், எப்போதாவது பேசினாலும் அளவுகடந்த அன்னியோன்னியம் அதில் ஆண்- ஆண் நட்பைவிட அதிகமாக இருக்கும்.
என் ஓட்டு பெண்-பெண் நட்புக்குத்தான்!
வேண்டுமென்றால் ஏ.சி.நீல்சனை வைத்து சர்வே எடுப்போமா? எந்த சர்வே எடுத்தாலும் ரொம்பவும் கூலாக முடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள். அவர்கள்தான் 'ஏ.சி' நீல்சன் ஆச்சே!
*********************
நான் சிறுகதை எழுதுவது எப்படி என்றொரு போஸ்ட் போட்டிருந்தேன். அதிலுள்ள சம்பவத்தை வைத்து, மிகச் சிறிய, அதே சமயம் சுவாரஸ்யமான முடிவில் கதை எழுதிய இவருக்கு என நன்றிகள்! ரொம்பப் பிடிச்சிருக்கு சாரே! நிச்சயம் சுஜாதா உங்களை.... பாராட்டியிருப்பாரு!
*********************
எனது மாமன் மகன் கிரேசிகிரியைப் பற்றி அடிக்கடி வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறேன். எந்தச் சூழலிலும் ஒரு சின்ன வார்த்தைப் பொறியில் கலகலக்க வைத்துவிடுவான்.
கடந்த வாரம் அவனது தந்தையார் காலமாகிவிட்டார். நல்ல மனிதர். நிறைந்த வயதில் மரணம். நேற்று பார்த்தபோது, கிரியின் அண்ணா தனது சில பூஜைச் சடங்குகளைச் செய்து கொண்டிருக்க, “அப்பாவுக்கு காரியங்களை நல்ல சிரத்தையாகச் செய்கிறாய்” என்று ஒரு பெரியவர் பாராட்டினார். உடனே சொன்னான் கிரி.. “பார்க்கறதுக்கு அப்பாதான் இல்ல”
எல்லாரும் சட்டென்று சிரிக்க, கிரியும் சிரித்துக் கொண்டிருந்தான்.. கண்ணில் நீருடன்.
***
Labels: அனுபவம் , நிகழ்வுகள்
மூன்று அனுபவங்கள்
நான் செல்லும் கடைகளில் ஏதாவது குறையிருப்பின் முடிந்தவரை பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஷோ-வாக இருக்கும் கடைகளில் அப்படி இல்லை. சின்ன கடை, பேக்கரிகளில் குறையிருப்பின் கொஞ்சம் பாலிஷாக சொல்ல நினைப்பேன்.
சமீபத்தில் (1970கள் அல்ல. போன வாரம்) உடுமலைப் பேட்டை போயிருந்தேன், தம்பியோடு போய்க்கொண்டிருந்தபோது, ஒரு தெருவின் ஓரத்தில் பெஞ்சில் வைத்து மசால் பொரி போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அதைப் பார்த்ததும் உடுமலையைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களோடு தினமும் செல்லும் (லைப்ரரிக்கு எதிரிலிருக்கும்) செட்டியார் பொரிக்கடை ஞாபகம் வரவே அங்கே காரைச் செலுத்தினேன். அசத்தலான டேஸ்டில் இருக்கும் அங்கே மசால்பொரி.
கடை பூட்டியிருக்கவே... மசால் பொரி ஆசை உந்தவே, மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து பொரி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். மசாலே இல்லை. வெறும் எண்ணையாக இருந்தது. இதற்குத்தான் முன்னபின்ன வராத கடைக்கு போகக்கூடாது என்று தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
சாப்பிட்டு முடித்ததும் “என்னங்க பெரியவரே.. நல்லாவே இல்லையே” என்று சொன்னேன். அவர் முகம் ஒரு மாதிரி ஆகி “என்னது?” என்று செய்திருந்த வேலையை நிறுத்திவிட்டுக் கேட்டார்.
எனக்கு பாவமாக இருக்கவே.. “இல்லீங்கண்ணா.. உங்க டேஸ்டுக்காகத்தான் எப்ப வந்தாலும் தேடி வர்றேன். உங்க வழக்கமான டேஸ்ட் இல்லைண்ணா” என்றேன்.
அவர் சிரித்தபடி “இப்போதான் மசால் கலக்கினேன். லெமன் இன்னும் மிக்ஸ் ஆகல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சா நல்லா மிக்ஸ் ஆகி காரமா வரும். அதுதான் தம்பி வேறொண்ணுமில்ல. நான் உங்ககிட்ட பத்துநிமிஷமாகும் சொல்லிருக்கலாம், என் தப்புதான்” என்றார்.
“ஐயையோ பரவால்லீங்க” என்று இவ்வளவு பொறுமையா விளக்கம் சொல்றீங்களே.. அது போதும்” என்றதற்கு அவர் சொன்னார்...
“‘உங்க வழக்கமான டேஸ்ட்டுக்கு வந்தேன்’னு நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது அதுதான் சொன்னேன். உண்மையா நான் இந்த ஊருக்கு வந்தது போனவாரம். கடைங்கற பேர்ல ரெண்டு ஸ்டூலையும், பெஞ்சையும் போட்டு பொரி யாவாரம் ஆரம்பிச்சது இன்னைக்குத்தான்” என்றார்.
சாப்பிட்ட பொரியிலிருந்த எண்ணையெல்லாம் என் முகத்தில் அசடாய் வழிந்தது!
**********************************
வெகுநாட்களுக்குப் பிறகு உறவினர் ஒருவரது வீட்டிற்கு துக்க நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றேன். ஊரில் இருக்கும்போதெல்லாம் தினமும் போய்க் கொண்டிருக்கும் வீடென்பதால் அக்கம் பக்கத்தவரையெல்லாம் பழக்கம்.
ஒவ்வொருவராய் வந்து போய்க் கொண்டிருக்க, இவர்கள் முன்பிருந்த ஒரு வீட்டு ஓனரின் மனைவி வந்தார். அந்த அம்மாவைப் பார்த்ததும், நாலைந்து மாதங்களுக்கு முன் அவரது கணவன் இறந்தது நினைவுக்கு வந்தது. அதற்கு நான் போகவில்லை.
என்னைப் பார்த்ததும்... “எப்படி இருக்க கிருஷ்ணா”என்றவாறு வந்தார்.
நான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு “சொல்லுங்கக்கா. அண்ணன்தான் இப்படிப் போய்ட்டாரு பாருங்க” என்றேன்.
“அதையேன் கேக்கற? இங்க வரச் சொன்னேன்.. சொன்னாக் கேட்டாத்தானே.. டவுனுக்குப் போய்ட்டு சாயந்திரமா வரேன்னு அடம்பிடிச்சு போய்ட்டார்” என்றார்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரேடியா டிக்கெட் வாங்கீட்டுப் போனவரை, இங்கே எப்படி வரச்சொன்னாங்க இவங்க என்று நினைத்துக் கொண்டேன்.
அவரே உடனே.. “ஆமா.. உனக்கெப்படி அண்ணன் டவுனுக்குப் போனது தெரியும்?”
முகத்தில் ஈயாடாமல் நின்றிருந்த என்னிடம் என் தம்பி ஆங்கிலத்தில் “வீட்டுக்காரம்மாவோட தங்கச்சிண்ணா இவங்க. நீ அக்கான்னு நெனைச்சுப் பேசற” என்று சொன்னபோதுதான் தெளிந்தது.
சுதாரித்துக் கொண்டு.. “நான்தான் அண்ணன்கிட்ட ஃபோன்ல பேசினேனே..” என்றேன்.
“அவர்கிட்டதான் ஃபோனே இல்லையே..”
இது என்னடா கொடுமை, விடாது போலிருக்கே- என்று நினைத்த நான்” என்கிட்ட ஃபோன் இருக்கே” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து காதில் வைத்தபடி எஸ்கேப்பானேன்!
***************************
ஆஃபீஸ் விட்டு நேரா, என்கூட வேலை செய்யற நண்பரோட வீட்டுக்கு ஒரு வேலையா போயிருந்தேன். அவரோட மகன் அன்னைக்கு வந்த பரீட்சைப் பேப்பர்களை அப்பாகிட்ட காட்டிகிட்டிருந்தான். நண்பர் அவனுக்கு பயங்கர அட்வைஸ் பண்ணிகிட்டிருந்தாரு.
“ஃபர்ஸ்ட் இல்லீனா செகண்ட் ரேங்க்-ன்ன, இப்போ ஃபோர்த் ரேங்க்ல வந்து நிக்கற. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா ஃபர்ஸ்ட் ரேங்க்கே வாங்கியிருக்கலாம்ல” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்லிகிட்டிருந்தாரு. என் மகளும் அவர் மகனும் ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ்தான். இந்த ரேங்க் சமாச்சாரங்களுக்கு நான் அவ்வளவாய் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இருந்தாலும் வேறெதாவது பேசி அவர் மூக்கை ஏன் உடைப்பானேன் என்று பேசாமலிருந்தேன்.
என்னைப் பார்த்ததும் “வா கிருஷ்ணா” என்றுவிட்டு தொடர்ந்து மகனை கொஞ்சம் அட்வைஸ் பண்ணிவிட்டு, என்னுடன் பேச ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவர் எதற்கோ வீட்டுக்குள் சென்றுவிட, பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் மகனிடம் “ஏம்ப்பா.. ரேங்க் வர்லீன்னு அப்பா ரொம்பத் திட்டறாரா..” என்று கேட்க “ஆமா அங்கிள்” என்று பாவமாய்ச் சொன்னான். நான் சும்மா இருக்காமல் “என் பொண்ணையெல்லாம் நான் இப்படித் திட்டனதில்லை. வரட்டும் உங்கப்பா” என்றேன்.
“ஐயையோ.. வேணாம் அங்கிள். எதுவும் கேட்காதீங்க. உங்க பொண்ணைவிட ரெண்டு மார்க்காவது அதிகமா எடுத்திருக்கணும்ல’ன்னுதான் திட்டே விழுந்திட்டிருக்கு” என்றான்.
‘ஙே’ என்று முழித்தேன் நான்.
*********************
Labels: அனுபவம் , நிகழ்வுகள்
எனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா?

நான் சந்திக்கற சில பிரச்சினைகள் உங்களுக்கும் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசை...
அதே மாதிரி, சில விஷயங்களை நான் சந்திக்க நேரும்போது என் மனதில் உருவாகும் எண்ணங்கள் (ச்சே.. ரொம்ப ஃபார்மலா இருக்குப்பா வார்த்தைகள்) வித்தியாசமானதா தோணும். உமா சொல்லுவாங்க... ‘நீங்க மட்டும்தான் இப்படியெல்லாம் நெனைக்க முடியும்’ன்னு. இல்லீன்னா.., ‘உங்களுக்கு மட்டும்தான் இப்படித் தோணும்’ன்னு சொல்வாங்க.
சரி.. நம்ம மக்களைக் கேட்டுப் பார்க்கலாமேன்னுதான் இந்தப் பதிவு....
----------------
a) தமிழ்மணத்துல பதிவை இணைக்க, நம்ம பதிவு தலைப்புல தெரியற தமிழ்மண விட்ஜெட்ல இருக்கற ‘அனுப்பு’வை ப்ரஸ் பண்ணினா தமிழ்மண விண்டோ ஓப்பன் ஆகி ‘ங்கொய்யால.. சேர்த்தாச்சுல்லடா? பின்ன எதுக்கு ச்சும்மா நொய் நொய்னு அமுக்கீட்டிருக்க? அஞ்சு நிமிஷம் பொறு.. ஒம்பதிவு தெரியும்’ங்குது. சரின்னு அடுத்தநாள் வேற பதிவு எழுதி, அதை நம்ம ப்ளாக் வழியா அனுப்பாம, தமிழ்மண முகப்புல இருக்கற ‘உங்கள் இடுகைகளைப் புதுப்பிக்க’வுல நம்ம யூ.ஆர்.எல்லை டைப்பி குடுத்தா ‘புதுசா என்னத்தை எழுதிக்கிழிச்ச? நீ கிழிச்சதையெல்லாம் இங்கன போட்டுட்டோம்ல’ன்னு மெரட்டுது.
மொத மாதிரி வகைப்படுத்தற ஆப்ஷனெல்லாம் இல்லியோ? உங்களுக்கும் இப்படித்தானா...?
b) எங்கியாவது சின்ன லெவல்ல சண்டை, சச்சரவுன்னா பைக்ல போயிட்டிருக்கறப்ப நின்னு வேடிக்கை பாக்கறவங்க மேல கோவம் வருது. ‘உன்னால அதைத் தடுக்கவோ, இல்ல போய் சமரசம் பேசவோ முடியும்னா நில்லு. ச்சும்மா நின்னு வேடிக்கை பார்த்து ஏன்யா கூட்டத்தைக் கூட்டறீங்க’ன்னு கேட்கத் தோணும். ஆனா அதை கேட்கமுடியாம கையாலாகாதவனா போய்ட்டே இருக்க மட்டுமே முடியுது.
c) இது உண்மையா வர்ற சிந்தனை. 'இது தப்பு, இப்படி நெனைக்கறியே ச்சீ’ன்னெல்லாம் திட்டக்கூடாது.
சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். உதாரணத்துக்கு போன பாரா-ல சொன்ன மாதிரி சூழ்நிலைகள்ல நின்னு சண்டையை சமரசம் பண்ணி அது வேற எக்ஸ்டண்டுக்குப் போகுமோங்கற திங்கிங்-ல பேசாம போய்டுவேன். அதே பாச்சிலரா இருந்து கமிட்மெண்ட்ஸ் இல்லைன்னா எறங்கிப் பார்த்துடலாம்டா’ன்னு தோணும்.
கல்யாணமான எல்லாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த எண்ணம் வருமா..? (சண்டையைத் தீர்க்கற மனோபாவத்தைச் சொல்லல. கல்யாணமாகாம இருந்திருக்கலாமே-ங்கற எண்ணம்.)
d) ஒரு நல்ல ஃபிகரைப் பார்த்து பேசறப்போ கண்ணைப் பார்த்து பேசறது பெண்களுக்குப் பிடிக்கும்’ன்னு (யாரு சொன்னா இதை?) கேள்விப்பட்டதால கண்ணைப் பார்த்து பேசிட்டிருப்பேன். ஆனா அப்படி கண்ணைப் பார்த்துப் பேசறது ரொம்ப செயற்கையா உணர்வேன். உங்களுக்கும் அப்படியா?
(c-ஐயும், d-ஐயும் மிக்ஸ் பண்ணி குழப்பிக்காதீங்க..)
e) நல்ல ஒரு மேட்டர் ரெடி பண்ணி அது பத்தி பதிவெழுத ரொம்ப நாளா ட்ரை பண்ணிகிட்டிருப்பேன். ஆனா அதுக்கான வரிகள் செட்டாகாது. சரி எப்படியாவது எழுதலாம்னு சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்தா திடீர்னு வேற எதுனா மொக்கையா சிந்தனை ஓடி, அது விஷயமா வார்த்தைகள் கடகடன்னு கொட்டி உடனடி பதிவாகி, உங்க கெட்ட நேரத்துக்கு அந்தப் பதிவு ஹிட் வேற ஆகிடும். உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா?
f) யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும். நம்ம புக்கை வாங்கிப் படிக்கறவர்கிட்ட சொல்லலாம். அவன் காசு போட்டு வாங்கின புக்கை ‘இப்படிப் பண்ணாதே.. அப்படிப் பண்ணாதே’ன்னு சொல்லி ஏன் அடிவாங்குவானேன்.
நீங்க இப்படி நெனைச்சதுண்டா?
g) சீரியல் பாக்கறது என்னமோ தெய்வகுத்தம்ன்னு பெண்களை விமர்சனம் பண்ணிகிட்டிருக்கேன். ஆனா சேனல் மாத்தும்போது, சீரியல்களின் சில சீன்களும் பின்னணில அவனுக கொடுக்கற ப்பப்பரப்பாஆஆஆஆஆஆங்.. ட்டொய்ங்.... ம்யூசிக்கும் என்னதான் சொல்றானுக இவனுக’ன்னு ஒரு அஞ்சு நிமிஷம் பார்க்க வைக்குது.
உங்களுக்கும் இப்படித்தானா?
h) பதிவுகள்லயோ, பத்திரிகைகளிலோ சினிமா விமர்சனங்களைப் படித்தபிறகு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் குறைந்துவிடுகிறது. அதே சமயம், சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன். (பலதடவை இதற்காக ‘ரெண்டு வார முந்தைய விகடன் எங்க’ என்ற ரீதியில் வீட்டைக் கலைத்துப் போட்டுத் தேடியிருக்கிறேன்)
சேம் ப்ளட்?
i) வாழ்க்கையில் பல விஷயங்களில் சமரசப்பட்டு போய்விடுகிறேன். அல்லது மாறிவிடுகிறேன். பிறகு அதற்கு சப்பையாக ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப்பிஸத்தை கேவலமாக நியாயப்படுத்துகிறேன்.
உதாரணத்திற்கு, குப்பையை பொதுவில் போடக்கூடாது, திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கக்கூடாது, வெளியில் உமிழக்கூடாது, சாலைவிதிகளை மீறக் கூடாது என்பது போன்ற குறைந்த பட்சம் என்னால் முடிந்த சில நியதிகளை கடைபிடித்து வருகிறேன். இந்த லிஸ்டில் திருட்டு டி.வி.டி வாங்கக் கூடாது என்ற ஒன்றும் இருந்தது. ஆனால், அதை பலமுறை மீறுகிறேன்.
அதிலும் ஒரு விதி வைத்திருக்கிறேன்.. தியேட்டரில் பார்த்த படத்திற்குதான் டி.வி.டி வாங்குவேனே தவிர, நேரடியாக டி.வி.டியிலேயே படம் பார்க்கும் வழக்கம் இல்லை.
இந்த தி.டி.வி.டி வாங்குவதை விவாதங்களின்போது நான் நியாயப்படுத்துவது விருமாண்டி படத்துக்குப் போன சம்பவத்தைச் சொல்லி...
40 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுத்தார்கள். வந்த ரௌத்ரத்தை அடக்கி, சரி என்று பொத்திக் கொண்டு போய் கொடுத்தபோது டிக்கெட் கிழிப்பவன் என் இரு மகள்களில் ஒருத்திக்கு நிச்சயமாய் டிக்கெட் வேண்டும் என்று சொல்லிவிடவே, மறுபடி டிக்கெட் வாங்கப் போனேன். அதே 40 ரூபாய் டிக்கெட் இப்போது 60 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருந்தான். கவுண்டரில் இரண்டு, மூன்று பேர்தான் இருந்தனர். என் முறை வரும்போது, 60 ரூபாயா என்று நான் உரக்கக் கேட்டதும் ‘சரி.. கடைசி டிக்கெட்.. 50 ரூபா கொடுங்க போதும்’ என்றான்.
என்ன அநியாயம் இது என்று மேலாளர் வரை சென்று வம்பிழுத்து எந்த நியாயமும் கிடைக்காமல் அவமானப்பட்டு வந்து உட்கார்ந்தபோது பசுபதியின் மாட்டை கமல் அடக்கிமுடித்திருந்தார்.
அதே தியேட்டரில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபோது, வெறும் சப்பையாக இருக்கவே சில விசாரணை மேற்கொண்ட போது, அவர்களே டூப்ளிகேட்டாக தயாரிப்பதாய் சொன்னார்கள்.
இதையெல்லாம் சொல்லி, இப்படி இருந்தா திருட்டு டி.வி.டி-ல படம் பார்க்காம என்ன பண்றதாம் என்று கேட்பேன். ஆனால் தியேட்டர் எஃபெக்ட் கிடைப்பதில்லை என்பதால் முதல் முறை தியேட்டர்தான்.
நீங்களும் இப்ப்டி எதிலாவது உங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதுண்டா?
j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலிருந்து பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் திருப்தியாக மாட்டேனென்கிறது மனது. அதேபோல கடைசியில் டைட்டில் போடும்போது தியேட்டர் ஆபரேட்டர் க்ளோஸ் பண்ணிவிட்டால், அவனை, அந்தத் தியேட்டர் ஓனரை, மேனேஜரை கெட்ட கெட்ட வார்த்தையால் (மனசுக்குள்ளதான்..) திட்டிவிட்டுத்தான் வெளியேறுகிறேன். அதேபோல படம் முடியும் முன்னே எழுந்திருக்கும் முந்திரிக்கொட்டைகளைக் கண்டாலும் கோபம் கோபமாய் வருகிறது.
நீங்க?
k) பயணங்களின் போது, வீட்டில் இருக்கும் படிக்காத சில புத்தகங்களை எடுத்துப் போகிறேன். ஆனால் அவற்றைப் படிக்காமல், போன இடத்தில் வேறு சில புத்தகங்களை வாங்கி வந்துவிடுகிறேன்.
நீங்களும் இப்படியா?
l) ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். ரோட்டோர இளநிக்கடையில் பைக்கை நிறுத்தினால்கூட எனக்கடுத்ததாய் நாலைந்து பேர் வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ என்று கேனத்தனமாக நினைத்திருக்கிறேன்.
எனக்குத்தான் இப்படியா.. உங்களுக்குமா?
இப்போதைக்கு அவ்வளவுதான். பிற சந்தேகங்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்கப்படும்!
அவியல் 24.11.08
நம்ம இதயம் வலது பக்கம் இருக்கா, இடது பக்கம் இருக்கா-ன்னு ஒரு பையனுக்கு சந்தேகம். அப்பாகிட்ட கேட்டானாம். ‘இடது பக்கம்தான் இருக்கு’ன்னாரு. இவனுக்கு நம்பிக்கை வரல. சரின்னு அவங்கப்பா, அவரோட நண்பரான ஒரு மருத்துவர்கிட்ட கூட்டீட்டு போறார். அவரும் சொல்றார் இடது பக்கம்தான்னு. ‘நீங்க எங்கப்பாவோட ஃப்ரெண்டு. என்னவேணா சொல்லுவீங்க’ங்கறான் இவன்.
உடனே அவரு அந்த மருத்துவமனைல இருந்த ஒரு மெடிக்கல் ப்ரொஃபசர்கிட்ட கூட்டீட்டு போறார். அவரு படமெல்லாம் போட்டு விளக்கிக் காட்டியும் இவன் நம்பல. ‘சரி.. வாடா’ன்னு அவனை மார்ச்சுவரிக்கு கூட்டீட்டு போய், அங்க இருந்த ஒரு பிணத்தை அறுத்துக் காட்டி ;
“பார்த்தியா.. இதயம் இடது பக்கம் இருக்கு’ன்னாங்க.
பையன் சொன்னானாம். “அதுனாலதான் செத்துப் போயிருக்கான்..”
(குறும்பட இயக்குனர் சாரதாகுமார் சொல்லக்கேட்டது)
*****************************
ப்ளாக்ல நம்மளை ஃபாலோ பண்றவங்களைப் பத்தி பேச்சுவந்தது. சப்போஸ் யாராவது நம்மளை ஃபலோ பண்ணினதை நிறுத்தினாங்கன்னா யாருன்னு கண்டுபிடிக்கமுடியுமான்னு யாரோ கேட்டாங்க. முடியாதுன்னு சொன்னாங்க. ‘எனக்கு முடியும்’ன்னு சொன்னான் நண்பன் கார்க்கி. ‘எப்படி’ன்னு கேட்டதுக்கு அவன் ப்ளாக்கை ஃபாலோ பண்றவங்களை ப்ரிண்ட் எடுத்து லேமினேஷனெல்லாம் பண்ணி வெச்சிருக்கானாம். நம்மளையும் ஃபாலோ பண்றாங்களேன்னு.. ரொம்ப நல்ல மனசுடா ஒனக்கு!
----------
தமிழை வளர்க்க (க்கும்!) நானும் ஒரு ஐடியா பண்ணலாம் என்று யோசனை செய்து (?!?) நண்பர்களை அழைத்து, “ஹலோ, ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு ஒரு சேலஞ்ச். ஓக்கேவா?” என்று சவால் விட்டு.. ஒன்றைக் கூறினேன்.
“இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு அலைபேசியில் பேசும்போது ‘ஹலோ’வுக்கு பதிலாக வணக்கம் என்றும், ‘ஓகே’வுக்கு பதிலாக ‘சரி’ என்றும் மட்டுமே கூற வேண்டும். நம் நண்பர்கள் வட்டத்தில் யார் மற்றொருவர் இதற்கு மாற்றாகக் கூறினாலும், இன்னொருவர் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யார் அதிகமாக ஹலோவையும், ஓகேவையும் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த வார தேநீர் செலவை ஏற்க வேண்டும் என்றும் முடிவானது.
முதல் இரண்டு வாரம் தேநீர் செலவு என்னுடையதுதான் என்று சொல்லவும் வேண்டுமா...
கிண்டலை விடுங்கள்.. ஆழமாக யோசித்தால் இந்த இரண்டு வார்த்தைகள்தான் தொலைபேசும்போது அதிகமாகப் புழங்கும் வார்த்தையாகப் படுகிறது.
ஹலோ, என்ன நான் சொல்றது ஓகேதானே?
___________________________
ஒரு சொகுசுக் காரைப் பற்றிய விமர்சனம் நடந்து கொண்டிருந்தது.
“அந்தக் கார்ல 140 வேகத்துல போனேண்டா. உள்ள இருக்கற யாருக்குமே ஒண்ணுமே தெரியல. அவ்ளோ ஸ்மூத்”
இன்னொருவன்: “நம்ம கார்ல 140ல போனா எல்லாருக்குமே தெரியும்”
“எப்படி?”
“அடுத்த நாள் பேப்பர்ல வருமே”
______________________
‘என்னைக்குப் ‘போக’ப் போறோம்ன்னு தெரியாது அதுனால நல்லவனா இருப்போம்’ என்பது பலரின் எண்ணம். அது சரிதான் என்பது தினசரிகளில் வரும் விபத்துச் செய்திகளைப் பார்த்தாலே தெரியும்.
ஒருத்தன் எத்தனை நல்லவனா இருந்து, அன்னைக்கு வெறுத்துப் போய் குடிக்க ஆரம்பிச்சவனா இருந்தாலும், வர்ற வழில எதுலயாவது அடிபட்டு செத்துட்டா ‘குடிகாரர் விபத்தில் பலி’ன்னு வரும். என்னமோ அவன் பரம்பரைக் குடிகாரன் மாதிரி!
ஒருத்தன் ஊரையே திருடி உலையில போட்டவனா இருப்பான். உலகத்துல இருக்கற எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கும். ஆனா, அவன் மலைக்கு மாலை போட்டிருக்கும்போது இறந்தா ‘ஐயப்ப பக்தர் பலி’ன்னு வரும்.
காலேஜ் போறப்ப இறந்தா ‘கல்லூரி மாணவன் சாவு’ அதே பையன் கட் அடிச்சுட்டு காதலி கூட இருக்கும் போது இறந்தா ‘காதலன் மரணம். காதலி கதறல்’
அதுனால மகாஜனங்களே.. நல்லவனாவே இருங்க!
___________________________
பேருந்துகள்ல இருக்கைகள் அடையாளத்துக்காக ஆண்கள்-பெண்கள்ன்னு போடுவாங்க இல்லையா... சில பஸ்ல (‘சிலபஸ்ல’ இல்ல) வித்தியாசமா பார்த்திருக்கேன்.
‘மலர்கள்-மன்னர்கள்’
‘ராஜாக்கள்-ரோஜாக்கள்’... இப்படி.
என் நண்பன் ஒருத்தன்கிட்ட இது பத்தி பேசிட்டிருந்தப்ப, முந்தைய ஜெ. ஆட்சியின் போது அவங்க ஊர் பஸ்ல பெண்கள் பகுதியில ‘இந்நாள்’ன்னும், ஆண்கள் பகுதியில ‘முன்னாள்’ன்னும் எழுதலாம்ன்னு ஐடியா பண்ணப் பட்டதாகவும், அப்புறம் அந்த ஐடியா கைவிடப்பட்டதாகவும் சொன்னான்!
வித்தியாசமாத்தான் இருக்கு. ஆனா முன்னாளா இருந்த இந்நாளோட அந்நாள் ஆதரவாளர்கள்கிட்ட எந்நாள் அடிவாங்குவோமோன்னு விட்டிருப்பாங்க!
----------------------------------
கவித..கவித....
விடிகிற போது
எழுத உட்கார்ந்தேன்
வெயில் வந்துவிட்டது
இந்த வரியின் மேல்.
இந்த வரியை விட
அழகாக இருக்கிறது
எழுதாத வரியின் நிழல்.
-கல்யாண்ஜி
பி.கு: இந்த வார வலைச்சரம் ஆசிரியரா இருக்கறதால அங்கேயும் வந்து வாழ்த்தீட்டு போங்க...
Labels: அனுபவம் , நிகழ்வுகள்

