குசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேரும்

Monday, 13 July, 2009 · 41 அலசல்கள்...

குசும்பன் இன்று காலை ஜ்யோவ்ராம் சுந்தர் பற்றி கண்ணியக்குறைவாக ஒரு பதிவெழுதியிருக்கிறார். எழுதி அவர் (இங்கே அவர் என்பது குசும்பனைக் குறிப்பிடுகிறது) படிப்பதற்கு முன்னமே அவரது சிஸ்டமே அதை டிலீட் செய்து விட்டிருக்கிறது!

இப்படி டிலீட் செய்யப்படும் பதிவை அவர் எப்படி அடிக்கலாம்? கொஞ்சமாவது காமன்சென்ஸ் வேண்டாமா? அடிப்பதற்கு முன்னால் யோசிக்க வேண்டாமா? சரி.. அடித்ததுதான் அடித்தார் அந்தப் பதிவை ஒரு வாரத்துக்கு வைத்து எங்களுக்கு தீனி போடாமல் உடனே எப்படி அவர் டிலீட் செய்யலாம்? - என்று மிகுந்த கோபத்தோடு விசாரித்தபோது ‘அப்படித்தான் டிலீட் செய்வேன்’ என்று முகத்திலறைந்தாற்போல சொல்லிவிட்டார்.

ஆகவே மிகுந்த கோபத்தோடு குசும்பனைக் கண்டித்து ஒரு பதிவெழுதினேன். PUBLISH POSTஐ அடித்தால் DELETE ஆகி விட்டது!

பிறகுதான் விசாரித்தேன்.. கீழ்க்கண்ட தகவல் தெரிந்தது.


வடகரைவேலன் அண்ணாச்சியிடம் UPDS என்றொரு சாஃப்ட்வேர் உள்ளது. அன்வாண்டட் போஸ்ட் டிலீஷன் சாஃப்ட்வேர். வீண் சர்ச்சைகளைக் கிளப்பும் பதிவுகளை நீங்கள் எழுதினீர்கள் என்றால் சிஸ்டத்தில் இருக்கும்போதே அந்தப் பதிவு டிலீட் ஆகிவிடும். என் டெம்ப்ளேட்டை மாற்றச் சொல்லி என் அட்மினிஸ்ட்ரேட்டரிடம் என் ப்ளாக்கர் கணக்கு விபரங்களைக் கொடுத்திருந்தேன். அவர் அந்த சாஃப்ட்வேரை என் அனுமதி இல்லாமலே என் ப்ளாக்கரில் இணைத்து விட்டார்.

ஆகவே எந்தப் பிரச்சினையான பதிவும் எழுத இயலாத கையறு நிலையில் இருக்கிறேன்.

அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரார்த்தனைகளை செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

இன்றைக்கு...

ஜ்யோவ்ராம் சுந்தர் - ரோசா வசந்த் சண்டை தீர பிரார்த்திப்போமாக.


பி.கு: UPDS வேண்டுவோர் என்னுடைய ஐ சி ஐ சி ஐ வங்கிக் கணக்கில் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.




.

அள‌வில்லா ஆ******

Sunday, 12 July, 2009 · 19 அலசல்கள்...

சென்ற வாரம் அமைதியாக சென்றது. முதலில் திங்கள்கிழமையும், பின் செவ்வாய்கிழமையும் அதன் பின் புதன் கிழமையும்... இருங்க இருங்க. சரி இதை விட்டுடுவோம்.

ஆறாம் தேதி என் ந‌ட்ச‌த்திர‌ வார‌ம் தொட‌ங்கிய‌து. அடுத்து ஏழாம் தேதி வ‌ந்த‌து. அத‌ன் பின்.. அட‌ இருங்க‌ பாஸ்.. இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டு ஓடினா எப்ப‌டி? இதையும் விட்டுடுவோம்.

ஒரு வாச‌க‌ர் ம‌ட‌லிட்டார். அட என்னப்பா நீங்க?.இது அதுவல்ல. நீங்க‌ ந‌ட்ச‌த்திர‌மா இருக்கிற‌ப்ப‌ இப்ப‌டி ஒரு புய‌ல் அடிச்சு ஓய்ஞ்சிருக்கே. அத‌னால் உங்க‌ ஆட்சி ச‌ரியில்லைன்னு சொன்னாரு. அதுச‌ரி. புய‌லை ப‌ரிச‌ல் ச‌மாளிக்க‌ முடியுமா?

என்ன‌தான் காரண‌ம் சொன்னாலும் வாய்ப்பை ச‌‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை என்ப‌து உண்மைதான். அத‌னால் என்ன‌ பாஸ்? ந‌ம‌க்கெல்லாம் எப்ப‌வுமே நட்ச‌த்திர‌ வார‌ம் தான். இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஆணிக‌ள் குறைந்து, நேர‌ம் கிடைத்து ந‌ம்மால் ஆன‌ டேமேஜை ப‌திவுகல‌கிற்கு செய்வேன் என்று உள‌மாற‌ உறுதி கூறுகிறேன்.

வாய்ப்ப‌ளித்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ந‌ன்றி.. ஆத‌ர‌வ‌ளித்த‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ன‌திற்கும் ந‌ன்றி.


அள‌வில்லா ஆணிக‌ளுட‌ன்,
ப‌ரிச‌ல்கார‌ன்.

தந்தை எனக்கெழுதிய கடிதம்!

Saturday, 11 July, 2009 · 46 அலசல்கள்...

அன்புள்ள கிருஷ்ணகுமாருக்கு...

உன் தந்தை பாசத்துடன் பாசத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.
உனக்கு நன்றாகத் தெரியும் எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் பிரியம். எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை! நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!

நானொன்றும் பெரிய வசதிபடைத்தவனில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்ட காலத்திலும், சேர்த்திவைக்கத் தெரியாமல், எல்லோருக்கும் கொடுத்து நமக்கு தேவைப்படும்போது வெறும்கையோடு இருந்துவிட்டேன்! எங்கே - நீயும் அப்படி ஆகி விடுவாயோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.
உனக்கு ஞாபகமிருக்கிறதா? நான் உடுமலை சேட்டு பெட்ரோல் பங்கில் கணக்கெழுதிக் கொண்டிருப்பேன். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நீ ஸ்கூலிலிருந்து வருவாய். நம்மிடம் அப்போது சைக்கிள் கூட இல்லை. வந்து என்னிடம் நோட்டு வாங்க காசு கேட்பாய். உன்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கொஞ்ச நேரம் கழித்து முதலாளியிடம் தயங்கித் தயங்கி கேட்டு, சம்பளத்திலிருந்து ஐந்து ரூபாய் வாங்கித் தருவேன். சில நாட்களில் அதுவும் முடியாமல், சரஸ்வதி ஸ்டோரில் என் பெயர் சொல்லி வாங்கிக் கொள்ளச் சொல்வேன். அப்பொழுதெல்லாம் உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் உனக்கு எப்போதாவது ஞாபகம் வருமா?

நீ குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து, பத்தாவது படிக்கும் வரை நாம் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எல்லோரும் என்னை "பாலுமாமா" என்று கூப்பிடுவது போல், நீயும் என்னை "பாலுமாமா" என்றுதான் கூப்பிடுவாய். நீ "அப்பா" என்றழைக்கவேண்டும் என்று நான் விருப்பப்படுவேனோ என்று நீ என்றாவது எண்ணியதுண்டா?
ஆறாவது படிக்கும் போது என் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உன் புத்தகப் பெட்டியில் வைத்திருந்தாய். உன் மாமா அதைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னபோதும், நான் உன்னை நேரடியாக கண்டிக்கவில்லை! உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை "டா" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை! நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது! ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!

உனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய்.

ஓரிரு வருடங்களுக்கு முன் எனக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது, வாரத்திற்கு ஒருமுறையேனும் நீ வருவாயென என் கண்கள் உன்னை எதிர்நோக்கும். உன் "பிஸியான" வேலைப்பளுவுக்கு நடுவிலே அது உன்னால் முடியாமல் போனது! ஒரு விருந்தாளியைப் போல் அவ்வப்போது வந்தாலும் - வந்தபோதெல்லாம் எனக்கு நீ செய்த பணிவிடைகளுக்காக என்னால் உனக்கு கொடுக்க முடிந்ததெல்லாம் என் புன்னகையை மட்டும்தான். அதைக்கூட நீ புரிந்துகொண்டிருப்பாயா என்று தெரியவில்லை.

என்ன செய்ய.. என்னதான் நீ உலகவிஷயங்கள் பேசினாலும் பெற்றவர்களைவிட வேலைதான் முக்கியம் என்றாகிவிட்ட இந்த இயந்திரச் சூழலில் - நீயும் ஒரு சராசரியாகிப் போனதில் எனக்கு வருத்தமிருக்குமா என்று நீ யோசித்ததுண்டா?

என்னைப்பற்றி இனி கவலைப் படாதே.. உன் அம்மாவையாவது அவ்வப்போது போய் பார்த்துக்கொள். திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்.. உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான்! பிறகு வருந்திப் பயனில்லை. உன் தம்பி பாவம். அவனுக்கு கடைசிவரை நானிருப்பேன் என்ற உறுதிமொழியை எனக்குக் கொடு.. இதைச் சொல்வதற்காக வருந்தாதே.. ஒருவேளை உனக்கு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தால் அவர்களை கரையேற்றியிருப்பாயா என்பது எனக்கு சந்தேகமே. ஏனென்றால் நீ எப்போதுமே உனக்காக மட்டுமான ஒரு உலகத்தில்தான் இருக்கிறாய்!
வேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி! நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்!

நேற்று தந்தையர் தினத்தில் எனக்காக ஏதாவது பதிவு போட்டிருப்பாய் என நினைத்தேன். ஏதோ குட்டிக்கவிதைகள் போட்டிருக்கிறாய். அதனாலென்ன நான் உன்னை தப்பாக நினைக்கவா முடியும்? (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே?) அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை!

உன் அம்மா, தம்பியைப் பார்த்துக்கொள். உமா, மீரா, மேகாவுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு!

மற்றபடி...
இங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்!

அன்புடன்...
உன் அப்பா.

அவியல் (09.07.09)

Thursday, 9 July, 2009 · 54 அலசல்கள்...

முத்திரை படத்தின் ஐஸ் ஜோக்கைப் போலவே கடந்த வாரம் ஒன்று நடந்தது. என் மகள்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் போகும்போது அன்றைய நாளிதழ் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. என்னைப் பார்த்தாலே நான் வாங்கும் நாளிதழ்களை கடைகாரர் கொடுத்தனுப்புவார் என்பதால், வழக்கமான கடையில் நிறுத்தி, பைக்கில் அமர்ந்தவாறே மேகாவை மட்டும் இறங்கச் சொல்லி 'போய் பேப்பர் வாங்கீட்டு வா’ என்றேன். மேகா இறங்கியவாறே கேட்டாள்:

“ரூல்ட் பேப்பரா அன்ரூல்ட் பேப்பரா ப்பா?”

***********************

ரண்டு தினங்களுக்கு முன் ஸஸி என்றொரு நட்பைப் பற்றிய பதிவு எழுதியிருந்தேனல்லவா? அதைப் படித்த என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் முருகேசன் என்பவர் ஒரு ஆச்சர்யமான விஷயம் சொன்னார். அவரும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் ஒரே பெயர் – முருகேசன். மூவரின் மனைவிகளின் பெயரும் செல்வி. “ஆனால் இது பேசிக் கொண்டெல்லாம் செய்யவில்லை. அதுவாக நிகழ்ந்தது. இன்றைக்கும் வருடத்துக்கு மூன்று நான்கு முறை சந்தித்துக் கொள்வதுண்டு” என்றார்.

சபாஷ்!

******************************

திமூலகிருஷ்ணனின் கதை ஒன்று விகடனில் வெளிவந்திருந்தது. அழைத்துச் சொன்னார். “பரிசல்.. உங்களையும் நர்சிம்மையும் முந்திட்டேனே” என்றார். புரியவில்லை. கேட்டதற்கு சொன்னார். ‘உங்களுது 26ம் பக்கம் வந்தது. நர்சிம்முது 91ம் பக்கம் வந்தது. என்னோடது 19ம் பக்கம்ல?’ என்று கெக்கலித்தார்.

அடக் கடவுளே என்று இதை நர்சிம்மிடம் சொன்னபோது அவர் சொன்னார்

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முக்கால்வாசிபேர் விகடனை பின்னாலிருந்துதான் படிப்பாங்க”

அதுசரி! நல்லாதான்யா சோடி போட்டுக்கறாங்க!

********************

ந்து ரொம்ப நாளானாலும் ‘குளிர்’ படத்தில் சிம்பு பாடிய ‘மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்’ பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. தற்போது ‘வாமனன்’ பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ‘ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய்’ பாடல்களின் இடையே யுவனின் இசை விளையாட்டு அபாரம். விஜய் ஏசுதாஸின் குரலில் ‘யாரைக் கேட்பது’ நல்ல மெலடி இருந்தாலும் ‘ஒரு தேவதை பார்க்கின்ற நேரமிது’தான் அதிக முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ரூப்குமார் ரத்தோடின் குரல் வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றாலும் இதையே ஹரிஹரன் பாடியிருந்தால் இன்னொரு ‘வெண்மேகம் பெண்ணாக’ கிடைத்திருக்கும்.

******************************

ல்யாணங்களுக்குப் போனால் மொய் கவரில் வித்தியாசமாக வாழ்த்துகள் எழுதிக் கொடுப்பது என் வழக்கம். எனக்கு மட்டும் எழுதிக் கொள்ளாமல் கூட வரும் நண்பர்களின் மொய் கவரையும் வாங்கி (காசு போடுவீங்களா-ன்னு கேட்கக் கூடாது!) வித்தியாசமான வாசகம் எழுதிக் கொடுப்பேன். சமீபத்தில் ஒரு கல்யாணத்துக்கு அதே மாதிரி எழுதிக் கொடுக்கும்போதுதான் கவனித்தேன்.

மொய் எழுதும் மகராசன்கள் பெயரை மட்டும் பார்த்து, கவரைக் கசக்கிப் போட்டு பணத்தை எண்ணி நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

பணத்தோடு எங்கள் வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் எசமானர்களே என்று சொல்லிவிட்டு வந்தேன்.

****************

மீபத்தின் அரசியல் ஸ்டண்டுகளில் மிகக் கவர்ந்தது கலைராஜன் – எஸ். வி. சேகர் சண்டைதான். ‘எஸ்.வி.சேகர் பன்றிகாய்ச்சல் வந்து இறந்தாலும் என்னைக் குற்றம் சொல்லுவார்’ என்று கலைராஜன் சொன்னதுக்கு ஒரு நிருபர் ‘அத்தனை நோயிருக்க பன்றிக்காய்ச்சலை ஏன் சொன்னீர்கள்?’ என்று கேட்டார். (நல்ல கேள்வி!) கலைராஜனோ ‘அதுதானே ஒரு இடத்தில் நிற்காமல் அங்கே இங்கே என்று அலைகிறது. அதனால்தான்’ என்றிருக்கிறார்.

அடுத்ததாக நிருபர் போனது எஸ்.வி.சேகரிடம். ‘கலைராஜன் உங்களை பன்றிக்காய்ச்சல் வந்து சாவார் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று கேட்டிருக்கிறார். எஸ்.வி.சேகர் சொன்னாராம். ‘அதெல்லாம் வராது. ஒருவேளை கலைராஜன் என்னைக் கடித்தால் வரலாம்’

நல்லாதான் பேசிக்கறாங்கய்யா மக்கள் பிரச்சினையை!

*************************

திவரும் நண்பருமான ராமன் வெய்ட் லாஸுக்கு ஒரு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு நண்பர் சாமிநாதன் சென்று அவரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார்.

‘ஹாங்காங்கில் எடையைக் குறைக்க எக்ஸ்ட்ரா கொழுப்பு இருக்கும் இடத்தில் ஒரு ஆய்ண்ட்மெண்டை தடவி தீயால் கொளுத்திவிடுவார்களாம். அந்த இடத்தில் கொழுப்பு முழுவதும் கரைந்து விடுமாம். அப்புறம் எடை குறைந்துவிடுமாம்.

“இப்படிப் பண்ணினா நம்ம வெய்ட்டே தெரியாதுங்க. ரொம்ப லேசா தெரியுமாம்” என்றார் சாமிநாதன் வெகு சீரியஸாக.

நான் கேட்டேன்… “கரெக்ட்தான். தீ நல்லா எரிஞ்சா நம்ம வெய்ட்டு நமக்கு தெரியாதுங்க. தூக்கறவனுக்குத்தானே தெரியும்?”

**************************

நேற்றைக்கு என் மகளின் பிறந்தநாளை ஏன் சொல்லவில்லை, பதிவெழுதவில்லை என்று பல மிரட்டல்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி. நட்சத்திரம் ஆனாலும், பிறந்தநாள் ஆனாலும் எல்லாருக்கும் நான் சொல்லிக் கொள்வது முதல் பதிவு/அன்றைய பதிவு ‘நான் இந்த வார நட்சத்திரம்’ அல்லது பிறந்தநாள் என்று மட்டும் போடுங்கள். இரண்டு மூன்று மணிநேரம் கழித்து பதிவு போட்டுக் கொள்ளலாம். என்ன எழுதினாலும் ‘வாழ்த்துகள்’ என்ற பின்னூட்டம்தான் அதிகம் வரும்.

இதைக் குறித்து ஒரு பிரபல பதிவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “நான் 200வது பதிவுக்கு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். நான் ஒரு பொண்ணை சந்திக்கறா மாதிரியும்.. அவ என் பதிவுகள் பத்தி பேசிகிட்டே வர்றா மாதிரியும்….” என்று ஆரம்பித்து சொன்னார். அபாரமாக இருந்தது. “சூப்பர் பாஸு! செம ஃபார்ம இருக்கீங்க.. எழுதுங்க.. கலக்குங்க” என்றேன். ‘ங்கொய்யால.. இது என் 200வது பதிவுதான். நான் எழுதி வந்துடுச்சு. அங்க வந்து படிக்காம வெறும் வாழ்த்துகள் சொல்லீட்டு பேச்சைப் பாரு’ என்றார்.

வழித்த அசடை துடைத்துக் கொள்ள வெகுநேரமானது.

***************************

அவியலில் அக்டைசியில் ஏதாவது கவிதையைக் குறிப்பிடுவது வழக்கம். இன்றைக்கு கவிதைக்கு பதில் கவிதைகளைப் பற்றி..

நேற்றைக்கு நான் எழுதிய கவிதைகளைப் படித்து ஒரு பதிவர் அலைபேசினார். ‘நீங்க மொதல்லயே கவிதையெல்லாம் எழுதியிருக்கீங்களா.. எனக்கு அவ்வளவா வராது’ என்றெல்லாம் சொன்னவர் அடுத்து சொன்னார். “நீங்க எழுதினதுல சிலது சூப்பர். ஒண்ணு சுமார்தான்” என்றார். “ஏன் சுமார்?” என்று கேட்டதற்கு “அந்தக் கவிதை எனக்கு படிச்ச உடனேயே புரிஞ்சுடுச்சுங்க” என்றார். நம்புங்கள்.. இதை அவர் வெகு சீரியஸாகச் சொன்னார்!

ஜ்யோவ்ராம், அனுஜன்யா போன்றவர்கள் ‘நேற்றைய கவிதையின் விளக்கம்’ என்று எழுதும் கவிதைக்கு அடுத்த நாள் விளக்கம் போட்டு இவருக்கு பதிலடி கொடுக்க வேண்டுகிறேன்!


.

தொடர்புக்கு

kbkk007@gmail.com

வெளம்பரம்...

தமிழ் வலையுலக வரலாற்றில் 350 ஃபாலோயரைத் தொட்ட முதல் தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்... (அடிங்......!)

என்னைத் தொடரும் நண்பர்கள்

இதுக்கும் முன்னாடி..

உங்கள் வரவே வரமாய்...

Provided by accredited online degrees website.

எல்லாமே ஒரு விளம்பரந்தேன்!!